#ENGvsIND செம ரிவியூ எடுத்த கேப்டன் கோலி..! இஷாந்த் சர்மா சூப்பர் பவுலிங்.. வெற்றியை நோக்கி இந்தியா

By karthikeyan VFirst Published Aug 16, 2021, 8:29 PM IST
Highlights

2வது டெஸ்ட்டில் 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணி 391 ரன்கள் அடித்தது.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 4ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(5) மற்றும் ரோஹித்(21) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கோலியும் 20 ரன்களில் வெளியேற இந்திய அணி 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் சீனியர் வீரர்களான ரஹானேவும் புஜாராவும் இணைந்து அனுபவத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து அருமையாக ஆடி 100 ரன்களை சேர்த்து கொடுத்தனர். சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி இந்திய அணியை மோசமான நிலையிலிருந்து காப்பாற்றினர். புஜாரா 45 ரன்னில் ஆட்டமிழக்க, ரஹானே 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட்டும் இஷாந்த் சர்மாவும் களத்தில் இருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே 22 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து இஷாந்த் சர்மாவும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

209 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஷமியும் பும்ராவும் இணைந்து அருமையாக ஆடி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தனர். ஷமி - பும்ரா ஜோடியை கடைசிவரை இங்கிலாந்து அணியால் பிரிக்கவே முடியவில்லை. உணவு இடைவேளைக்கு பிறகு ஒன்றரை ஓவர் ஆடிய பின்னர், 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

 இதையடுத்து 60 ஓவரில் 272 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் சிப்ளியை டக் அவுட்டாக்கினார் ஷமி.

அதன்பின்னர் ஷமியின் பந்தில் ஹசீப் ஹமீதின் கேட்ச்சை ரோஹித் சர்மா 2வது ஸ்லிப்பில் கோட்டைவிட்டாலும், அவரை களத்தில் நிலைக்கவிடாமல் 9 ரன்னில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. பின்னர் ரூட்டுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மா வீசிய அந்த பந்து பேர்ஸ்டோவின் கால்காப்பில் பட, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. 

முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து 2 ரிவியூக்களை அவசரப்பட்டு எடுத்து வீணடித்ததால் கேப்டன் கோலி மீது விமர்சனம் இருந்தது. அதிகமான ரிவியூக்களை தவறாக எடுத்த கேப்டனும் கோலி தான். எனவே ரிவியூ எடுப்பதில் கவனமாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த கோலி, ரிவியூ எடுக்க சற்று யோசித்தார். ஆனாலும் அது அவுட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உறுதியாக நம்பிய கோலி, டீ பிரேக்கிற்கு முன் விக்கெட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் ரிவியூ எடுத்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. பந்து ஸ்டம்ப்பை தாக்கியதால், பேர்ஸ்டோ 2 ரன்னில் நடையை கட்டினார்.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்துள்ளது. கடைசி செசனில் 38 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 205 ரன்கள் தேவை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பேயில்லை. ஆனால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது.
 

click me!