West Indies vs England:கடைசி ஓவரில் காட்டடி அடித்த அகீல் ஹுசைன்!பரபரப்பான டி20போட்டியில் இங்கி., த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 24, 2022, 2:39 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
 

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற, 2வது போட்டி பார்படாஸில் நடந்தது.

2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜேசன் ராய் (45), மொயின் அலி (31), டாம் பாண்டன் (25), கிறிஸ் ஜோர்டான் (27) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது இங்கிலாந்து.

172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன் (23), டேரன் பிராவோ (24) ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். ஷேய் ஹோப் (2), பொல்லார்டு (1), ஜேசன் ஹோல்டர் (1) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.

ரொமாரியோ ஷெஃபெர்டு சிறப்பாக ஆடினார். 9வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அகீல் ஹுசைன் களத்தில் நிற்க, கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை இங்கிலாந்து பவுலர் சாகிப் மஹ்மூத் வீச, அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார் அகீல் ஹுசைன். கடைசி ஓவரில் 30 ரன்கள் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற விஷயம். ஆனால் அகீல் ஹுசைனின் காட்டடியால் அந்த ஓவரில் 28 ரன்கள் கிடைத்தது(2 வைடுகள் உட்பட). அகீல் ஹுசைன் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினாலும் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-1 என டி20 தொடரை சமன் செய்துள்ளது.
 

click me!