பட்லர், பேர்ஸ்டோ, மோர்கன் அதிரடி பேட்டிங்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து தொடரை வென்ற இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Feb 17, 2020, 10:06 AM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 223 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக அடித்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, டி20 தொடரை வென்று அசத்தியது. 
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து வென்றது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு போட்டி ரத்தானதால், 1-1 என சமன் அடைந்தது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் 222 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் பவுமாவும் டி காக்கும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 84 ரன்களை குவித்து கொடுத்தனர். டி காக் 24 பந்தில் 35 ரன்களும் பவுமா 24 பந்தில் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். 

அதன்பின்னர் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, தென்னாப்பிரிக்க அணி மெகா ஸ்கோரை எட்ட உதவினார். கிளாசன் 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களை குவித்தார். மில்லர் தன் பங்கிற்கு 20 பந்தில் 35 ரன்கள் விளாச, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 222 ரன்களை குவித்தது. 

223 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் முதலிரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடாத பட்லர், இந்த போட்டியில் அடி வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய அவர் அரைசதம் அடித்தார். 29 பந்தில் 57 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழக்க, மூன்றாம் வரிசையில் இறங்கி பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்தார். 

பட்லர் ஆட்டமிழந்த பிறகு, களத்திற்கு வந்த மாலன் 12 பந்தில் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் மோர்கன் காட்டடி அடித்தார். அதிரடியாக ஆடிய மோர்கன், கடைசிவரை களத்தில் நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பேர்ஸ்டோவும் ஆட்டமிழந்த பிறகு, மோர்கனுடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ், 18வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை எளிதாக்கினார். அவர் 12 பந்தில் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்களை மோர்கன் விளாசியதால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

2-1 என டி20 தொடரை வென்று அசத்தியது இங்கிலாந்து அணி. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வென்றார். 
 

click me!