4வது போட்டியிலும் பாகிஸ்தானை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து.. 11 பேரும் பேட்டிங் ஆடுனா எந்த இலக்கும் எளிதுதான்

By karthikeyan VFirst Published May 18, 2019, 11:00 AM IST
Highlights

40வது ஓவரில் பாபர் அசாம் அவுட்டாகும்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 250. அதன்பின்னர் கடைசி 10 ஓவர்களில் ஷோயப் மாலிக் நின்றவரை ரன் வேகமாக சேர்ந்தது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்றது. 

நான்காவது போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மார்க் உட்டின் பந்தில் காயமடைந்து ரிட்டயர் ஹட் ஆகினார். மற்றொரு தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அரைசதம் கடந்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பாபர் அசாம் அபாரமாக ஆடி சதமடித்தார். பாபர் அசாம் - முகமது ஹஃபீஸ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. ஆனால் ஹஃபீஸ் 59 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே பாபர் அசாமும் 115 ரன்களில் நடையை கட்டினார். 

40வது ஓவரில் பாபர் அசாம் அவுட்டாகும்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 250. அதன்பின்னர் கடைசி 10 ஓவர்களில் ஷோயப் மாலிக் நின்றவரை ரன் வேகமாக சேர்ந்தது. மாலிக் 26 பந்துகளில் 41 ரன்களை அடித்தார். அவர் அவுட்டானதும் ரன் வேகம் குறைந்தது. மாலிக் அவுட்டானதும் கடைசி 20 பந்துகளில் வெறும் 24 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 340 ரன்கள் எடுத்தது. 

341 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அபாரமாக ஆடி சதமடித்த ராய், 114 ரன்களில் ஆட்டமிழந்தார். வின்ஸின் முதல் விக்கெட்டுக்கு பிறகு ராய்க்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஜோ ரூட்டும் ராய் அவுட்டான அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 

ஜோன் டென்லி, டாம் கரன் ஆகியோர் தங்களது பங்குக்கு சில ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அணியை வெற்றி பெற செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பென் ஸ்டோக்ஸ், மறுமுனையில் நிதானமாக நின்று ஆடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். 64 பந்துகளில் 71 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காத ஸ்டோக்ஸ், கடைசி ஓவரில் இலக்கை எட்ட செய்தார். இதையடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இதன் மூலம் 3-0 என தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார். 

இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அது அந்த அணியின் வெற்றியை பாதிக்கவில்லை. நேற்றைய போட்டியில் ஆடிய அணியில், கடைசி 2 வீரர்கள் வரை பேட்டிங் ஆட தெரிந்தவர்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர் 10வது வீரர், மார்க் உட் 11வது வீரர். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல்லில் பேட்டிங் ஆடியதை பார்த்திருக்கிறோம். கடைசி பேட்ஸ்மேன் வரை பேட்டிங் ஆட தெரிந்தவர்களாக இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எவ்வளவு பெரிய இலக்குமே கடினமாக இல்லை. 
 

click me!