MI vs CSK: பொல்லார்டு காலில் விழுந்து வணங்கிய பிராவோ..! நெகிழ்ச்சி சம்பவம்

Published : Apr 21, 2022, 10:23 PM IST
MI vs CSK: பொல்லார்டு காலில் விழுந்து வணங்கிய பிராவோ..! நெகிழ்ச்சி சம்பவம்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பொல்லார்டு காலில் பிராவோ விழுந்து வணங்கிய சம்பவம் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.  

ஐபிஎல்லில் வெற்றிகரமான வீரர்களில் முக்கியமானவர்கள் கைரன் பொல்லார்டு மற்றும் ட்வைன் பிராவோ. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களான பொல்லார்டு - பிராவோ ஆகிய இருவருமே ஐபிஎல்லில் அவர்கள் ஆடும் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்காக இருவரும் 14 ஆண்டுகள் இணைந்து ஆடியிருக்கின்றனர். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களான பொல்லார்டு மற்றும் பிராவோ ஆகிய இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் நண்பர்களாக இருந்தாலும், கடும் போட்டியாளர்கள்.

ஐபிஎல்லில் பரம எதிரி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளில் ஆடினர் பொல்லார்டும் பிராவோவும். அதனால் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே மோதும் போட்டிகளில் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல்களும் மிகவும் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கும். 

ஐபிஎல்லில் பொல்லார்டை 9 முறை அவுட்டாக்கியிருக்கிறார் பிராவோ. பிராவோவிற்கு எதிராக பொல்லார்டின் ஸ்டிரைக் ரேட் 170க்கு மேல். இப்படியாக இவர்கள் இருவருக்கும் இடையே நட்புடன் கூடிய கடும் போட்டி நிலவிவந்திருக்கிறது. 

ஐபிஎல்லில் இருவருமே மிகப்பெரிய லெஜண்டுகள். பொல்லார்டு 185 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3364 ரன்களை குவித்துள்ளார்; 66 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பிராவோ 158 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1546 ரன்கள் அடித்துள்ளார்; 179 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்லின் லெஜண்ட் கிரிக்கெட்டர்களான பொல்லார்டு மற்றும் பிராவோ ஆகிய இருவருக்கு இடையேயான ஊடல் பார்க்க மிக அருமையாக இருக்கும். அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாகவும் அப்படியான ஒரு சம்பவம் நடந்தது.

ஏப்ரல் 20(புதன்கிழமை) பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பை - சிஎஸ்கே போட்டிக்கு முன் இரு அணி வீரர்களும் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, பொல்லார்டிடம் சென்ற பிராவோ, பொல்லார்டின் காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக பிராவோவை தூக்கினார் பொல்லார்டு. பின்னர் இருவரும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?