டி20 உலக கோப்பையை அந்த அணி தான் வெல்லும்..! என்ன தினேஷ் கார்த்திக் திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க

By karthikeyan VFirst Published Aug 18, 2021, 7:46 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர்  17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஐசிசி இன்றுதான், டி20 உலக கோப்பைக்கான முழு போட்டி அட்டவணையையும் வெளியிட்டது. 

இந்த டி20 உலக கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளில் ஒரு அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பிருப்பதாகத்தான் பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பார்க்கின்றனர்.

குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், டி20 உலக கோப்பை தொடர் நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கும் மற்ற நாடுகளை காட்டிலும் நன்கு பழக்கப்பட்டது என்பதால், இந்த 2 அணிகளில் ஒன்றுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கெய்ல், பொல்லார்டு, பிராவோ ஆகிய டி20 கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்களையும், பூரன், ஹெட்மயர் ஆகிய இளம் அதிரடி வீரர்களையும் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக திகழ்வதால் அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. 

ஒயின் மோர்கன் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடிவரும் நிலையில், அந்த அணிக்கான வாய்ப்பும் நிறைய இருக்கிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்று டி20 உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், இந்திய அணி இல்லாமல் வேறு எந்த அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்று கேட்டால், இங்கிலாந்து என்று சொல்வேன் என்றார் தினேஷ் கார்த்திக்.

ஏற்கனவே டி20 உலக கோப்பை குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஃபைனலில் மோதுவதை பார்க்க விரும்புவதாக கூறியிருந்தார். இந்தியா இல்லாமல் வேறு ஒரு அணியை தேர்வு செய்வதென்றால் இங்கிலாந்து என்று இப்போது கூறியுள்ளார்.
 

click me!