ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்திய அணி முன்னேறிவிட்ட நிலையில், ஃபைனலில் தொடக்க வீரராக கில் - ராகுல் ஆகிய இருவரில் யார் ஆடலாம் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட 2019-2021 முதல் சீசனில் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியது. ஆனால் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது. 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவரும் நிலையில், இந்தமுறையும் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தோற்றதால் இந்திய அணியும் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
எனவே வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இங்கிலாந்து கண்டிஷனுக்கு ஏற்ப இந்திய அணி ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும். அந்தவகையில், ஃபைனலில் இந்திய அணியில் ராகுல் - கில் இருவரில் யார் தொடக்க வீரராக ஆடலாம் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ராகுல் தான் தொடக்க வீரராக ஆடினார். ஆனால் அவர் 2 டெஸ்ட்டிலும் படுமோசமாக சொதப்பியதால் டெஸ்ட் அணியின் துணை கேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட ராகுல், கடைசி 2 போட்டிகளுக்கான அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் தொடக்க வீரராக ஆடினார். 3வது டெஸ்ட்டில் கில் சரியாக ஆடாவிட்டாலும், 4வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடி சதமடித்தார். 128 ரன்களை குவித்துஅசத்தினார்.
ஷுப்மன் கில் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டாலும் கூட, ராகுல் இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் கொண்டவர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கவுள்ள லண்டன் ஓவலில் சதமும் அடித்திருக்கிறார். எனவே ராகுல் - கில் இருவரில் யார் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தொடக்க வீரராக ஆடுவார் என்று கேள்வி இருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் தனது கருத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில் தான் கண்டிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தொடக்க வீரராக ஆடவேண்டும். அதில் எந்தவித சந்தேகமோ குழப்பமோ தேவையில்லை. அவர் ஒரு லாங்ரேஸ் குதிரை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் தான் தொடக்க வீரர் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.