
TNPL 2025: Dindigul Dragons Beat Salem Spartans: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் SKM சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் நிதிஷ் ராஜகோபால் 47 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் விளாசினார். ராஜேந்திரன் விவேக் 20 பந்தில் 3 சிக்சர், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்
சன்னி சந்து 14 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்தார். கவின் (1), ஹரி நிசாந்த் (10), கேப்டன் அபிஷேக் (15) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். திண்டுக்கல் தரப்பில் அந்த அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். சந்தீப் வாரியர், கார்த்திக் சரண், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
திண்டுக்கல் அதிரடி தொடக்கம்
பின்பு திண்டுக்கல் அணி சவாலான இலக்கை துரத்திய நிலையில், கேப்டன் அஸ்வின், சிவம் சிங் அதிரடியில் பட்டய கிளப்பினார்கள். அதிரடியாக விளையாடிய அஸ்வின் 14 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் விளாசினார். சிவம் சிங் 24 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்தார். பின்பு வந்த பாபா அபராஜித் (4), மான் பாஃப்னா (3) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
வருண் சக்கரத்தி வெற்றி பெற வைத்தார்
தொடர்ந்து ஆர்.கே. ஜெயந்த் (25), ஹன்னி சைனி (35), விமல் குமார் (24 ரன்) சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. பொய்யாமொழியின் இந்த ஓவரில் 2வது பந்தில் கார்த்திக் சரண் அவுட் ஆனார். அடுத்த 2 பந்தில் 3 ரன் மட்டுமே வந்தது. 5வது பந்தை பொய்யாமொழி நோபால் ஆக வீசினார். இந்த ப்ரீ ஹிட் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட வருண் சக்கரவர்த்தி அடுத்த பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 36 ரன்களும், 3 விக்கெட்டும் வீழ்திய அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார்.