இந்திய அணியை காப்பாற்ற அவரைத்தவிர யாராலும் முடியாது..! உடனடியாக ஆஸி.,க்கு பறக்கும் ராகுல் டிராவிட்..?

By karthikeyan VFirst Published Dec 20, 2020, 7:24 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்களை நன்றாக பேட்டிங் ஆட வைக்க ராகுல் டிராவிட்டால் மட்டுமே முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் படுமோசமான பேட்டிங்கால், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்கள் மட்டுமே அடித்து படுமட்டமாக தோற்றது.

விராட் கோலி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பும் நிலையில், ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமியும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கோலி, ஷமி ஆகிய இருவருமே ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு.

முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் கோலி மட்டுமே அரைசதம் அடித்தார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி என யாருமே சரியாக ஆடவில்லை. 2வது இன்னிங்ஸில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தைக்கூட எட்டவில்லை. ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகிய இருவரின் அபாரமான பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர்.

இந்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேகமான ஸ்விங் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கி இந்திய வீரர்களை பேட்டிங்கில் மேம்படுத்த ராகுல் டிராவிட்டால் தான் முடியும் என்பதால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள திலீப் வெங்சர்க்கார், ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களுக்கு உதவ ராகுல் டிராவிட்டை உடனடியாக பிசிசிஐ ஆஸி.,க்கு அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலியாவில் ஸ்விங் கண்டிஷனில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களை சிறந்த ஆலோசனைகளை வழங்கி சரியான முறையில் வழிநடத்த ராகுல் டிராவிட்டால் மட்டுமே முடியும். ராகுல் டிராவிட் இருப்பது ஆஸி.,யில் இந்திய வீரர்களுக்கு பெரிய ஊக்குவிப்பாக அமையும் என்று திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
 

click me!