எத்தனையோ பேரோட சோலிய முடிச்சுவிட்ட நம்ம தோனி, ஒரு சின்ன பையன்கிட்ட சிக்கிட்டாரே..!

By karthikeyan VFirst Published Jun 23, 2019, 10:12 AM IST
Highlights

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனாலும் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 

உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான நேற்றைய போட்டி செம விறுவிறுப்பாக இருந்தது. 

சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்த இந்திய அணி, பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனாலும் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். 

52 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்த தோனியை ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் ஸ்டம்பிங் செய்தார். ரஷீத் கானின் பந்தை இறங்கி அடிக்க நினைத்த தோனி, பந்தை மிஸ் செய்தார். அந்த பந்தை பிடித்து வேகமாகவும் கவனமாகவும் ஸ்டம்பிங் செய்தார் இக்ரம். 

தோனி இதுபோன்றெல்லாம் ஸ்டம்பிங் ஆகும் ஆளே கிடையாது. பந்தை மிஸ் செய்தாலும் உடனடியாக கிரீஸூக்கு திரும்பிவிடுவார். ஆனால் நேற்று அது முடியவில்லை. இக்ரம் அதிவேகமாக செயல்பட்டு தோனியை ஸ்டம்பிங் செய்தார். எத்தனையோ பேரை ஸ்டம்பிங் செய்து விரட்டியவர் தோனி. கடைசியில் 18 வயதான இளம் வீரரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அதிருப்தியுடன் வெளியேறினார் தோனி.

click me!