நீ கண்டிப்பா அதை பண்ணியிருக்கணும்டா தோனி.. இது மட்டும்தான் என் மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கு

By karthikeyan VFirst Published Jan 12, 2020, 2:50 PM IST
Highlights

உலக கோப்பை அரையிறுதியில், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட்டானது குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார். 
 

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, லீக் சுற்று முழுவதும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்தது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. 

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி  221 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இந்திய அணி, அந்த போட்டியில் 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்படியான இக்கட்டான சூழலில் நான்காம் வரிசையிலோ அல்லது ஐந்தாம் வரிசையிலோ தோனி இறக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறக்கப்பட்டு, 7ம் வரிசையில்தான் தோனி இறக்கப்பட்டார். இதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

ஆனால் தோனி பெஸ்ட் ஃபினிஷர் என்பதால், அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பார் என்பதால்தான் அவர் பின்வரிசையில் இறக்கப்பட்டதாக, அணி நிர்வாகம் சார்பில் நியாயம் கற்பிக்கப்படுகிறது. இந்திய அணி, அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ஆனால் ஜடேஜாவும் 77 ரன்கள் அடித்த நிலையில், 48வது ஓவரில் ஆட்டமிழக்க, மொத்த பொறுப்பும் அழுத்தமும் தோனி மீது இறங்கியது. 

கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 49வது ஓவரில், அரைசதம் அடித்த தோனி, மார்டின் கப்டிலின் அபாரமான த்ரோவால் ரன் அவுட்டானார். கடைசி ஓவரை ஜேம்ஸ் நீஷம்தான் வீசியிருப்பார். எனவே தோனி கண்டிப்பாக தனது மனதிற்குள் ஒரு கணக்கு வைத்திருந்திருப்பார். அதை செயல்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. தோனியின் திட்டம் நிறைவேறாமல் போயிருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தோனி கடைசி ஓவரில் ஆடவே முடியாமல் 49வது ஓவரிலேயே ரன் அவுட்டானார். 

ரன் அவுட்டான தோனி, இந்திய அணி உலக கோப்பையை இழந்ததை நினைத்தும், தன்னால் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியாததை நினைத்தும் கண் கலங்கியவாறே களத்தைவிட்டு வெளியேறினார். 

இந்நிலையில், அந்த ரன் அவுட் குறித்து பேசியுள்ள தோனி, அந்த சம்பவத்திற்கு பின்னர், எனக்கு நானே ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்.. நான் ஏன் அந்த நேரத்தில் டைவ் அடிக்காமல் போனேன் என்பதுதான் அது. வெறும் 2 இன்ச் தான். டேய் தோனி, நீ கண்டிப்பாக டைவ் அடிச்சுருக்கணும்டா என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று தோனி தெரிவித்துள்ளார். 
 

click me!