நான் மட்டும் என்ன ஸ்பெஷலா..? அப்படிலாம் ஒண்ணும் இல்ல.. நானும் எல்லாரையும் மாதிரிதான்!! ஆனால்... மனம் திறந்த தோனி

By karthikeyan VFirst Published Oct 17, 2019, 5:05 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்தவர். 
 

கேப்டன்சியிலிருந்து விலகிய தோனி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோலியின் கேப்டன்சியில் சீனியர் வீரராக அணியில் ஆடிவருகிறார். உலக கோப்பைக்கு பின்னர் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் வலுத்துள்ள நிலையில், கங்குலி பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தோனியின் ஓய்வு குறித்த தெளிவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

தோனி கேப்டனாக இருந்த காலத்தில் எந்தவொரு இக்கட்டான அல்லது நெருக்கடியான சூழலிலும் உணர்ச்சிவசமோ அல்லது கோபமோ அல்லது பதற்றமோ அடையமாட்டார். எப்பேர்ப்பட்ட சூழலிலும் அமைதி காத்து நிதானமாகவும் தெளிவாகவும் அந்த சூழலை அணுகுவார். அவரும் டென்சனாகி, வீரர்களையும் டென்சனாக்கும் செயலை செய்ததே இல்லை. வீரர்களுக்கு தெளிவான அறிவுரையை வழங்கி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்து, கைமீறி போன போட்டியில் கூட வெற்றியை பறித்துவிடுவார். அதுதான் தோனியின் ஸ்பெஷாலிட்டி. 

அதனால்தான் தோனி, மிஸ்டர் கூல், கூல் தோனி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஆனால் தனக்கும் கோபம் வருமென்றும் ஆனால் அதை கட்டுப்படுத்துவதில் தான் வல்லவர் என்றும் தெரிவித்துள்ளார் தோனி. மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, இதுகுறித்து பேசினார். 

“களத்தில் சில நேரங்களில் எனக்கும் கோபம் வரும். சில நேரங்களில் அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்படுவதால் ஆதங்கம் ஆகும். ஆனால் அவையெல்லாம் ஆக்கப்பூர்வமான எந்த விஷயத்திற்கும் உதவாது. அதுபோன்ற இக்கட்டான சூழல்களில் இது மாதிரியான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும். எனவே அடுத்த திட்டங்களை பற்றி நான் யோசிக்க தொடங்கிவிடுவேன். அடுத்ததாக எந்த வீரரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று திட்டமிட தொடங்கிவிடுவதால் எனது எமோசன்கள் கட்டுக்குள் வந்துவிடும்” என்று தோனி தெரிவித்துள்ளார். 
 

click me!