தோனி மீது எஃப்.ஐ.ஆர் போட்டே தீரணும்.. ஒற்றை காலில் நிற்கும் புகார்தாரர்கள்.. தோனியின் காலை சுற்றிய பாம்பாய் தொடரும் சிக்கல்

By karthikeyan VFirst Published Dec 3, 2019, 4:14 PM IST
Highlights

ஆயிரக்கணக்கானோரிடம் வீடு கட்டித்தருவதாக கூறி பணம் வாங்கிவிட்டு வீடு கட்டித்தராத அமரப்பள்ளி குழுமத்தின் பிராண்ட் தூதராக இருந்த தோனியின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்துகின்றனர். 
 

2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமரப்பள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனம் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமாக திகழ்கிறது. அமரப்பள்ளி குழுமத்தின் பிராண்ட் தூதராக 2010-2016ம் ஆண்டுவரை இருந்தார். இந்த காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கானோரிடம் வீடு கட்டித்தருவதாக கூறி 2,647 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. 

ஆனால் சொன்னதைப்போல குறிப்பிட்ட நேரத்தில் வீடு கட்டித்தராததை அடுத்து அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள், உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமரப்பள்ளி குழுமம், முதல்தர குற்றத்தை செய்தது என்று காட்டமாக தெரிவித்தது. மேலும், மத்திய அரசின் தேசிய கட்டுமானக் கழகம், வீடுகளை கட்டி முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு கடந்த மாதம் 27ம் தேதி அமரப்பள்ளி குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் அனில் குமார் சர்மா, குழும உறுப்பினர்கள் ஷிவ பிரியா, மோகித் குப்தா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. இந்த பட்டியலில் தோனியின் பெயரையும் இணைத்து அவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என புகார்தாரர்கள் சார்பில் ருபேஷ் குமார் மனு அளித்துள்ளார். 

தோனியின் பெயரையும் புகழையும் பயன்படுத்தித்தான் அமரப்பள்ளி குழுமம், வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளது. வாடிக்கையாளர்களும் தோனியை நம்பி பணத்தை செலுத்தியுள்ளார்கள். எனவே தோனியின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இந்த பிரச்னையில் சிக்கி கடந்த சில ஆண்டுகளாகவே தோனி தவித்துவருகிறார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக 42 கோடி ரூபாய் தோனி வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!