
தமிழ்நாட்டின் கோயில் நகரம், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது மதுரை. பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான மதுரையில் சென்னைக்கு அடுத்தப்படியாக மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ.350 கோடியில் கிரிக்கெட் மைதானத்தை அமைந்துள்ளது.
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே 11.5 ஏக்கர் நிலத்தில் இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கபப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். இதற்காக கூல் கேப்டன் தோனி மும்பையில் இருந்து இன்று மதியம் மதுரை வந்தார்.
தோனி முன்கூட்டியே வருவார் என தகவல் வெளியாகி இருந்ததால் அவரை காண்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விமானத்தை விட்டு இறங்கி தோனி காரில் ஏற சென்றபோது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தல..தல.. என்று கூறி அவர்கள் ஆரவாரமிட்டனர். தோனி அவர்களுக்கு கை காண்பித்து விட்டு காரில் ஏறி சென்றார்.