
வங்கதேசத்துக்கு எதிராக அசத்திய அதே கையோடு சையத் முஷ்டாக் அலி தொடரில், ராஜஸ்தான் அணிக்கு ஆடவந்துவிட்டார் தீபக் சாஹர். விதர்பா அணிக்கு எதிரான போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி 13 ஓவரில் 99 ரன்கள் அடித்தது. தீபக் சாஹர் 3 ஓவரில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் ஹாட்ரிக்கும் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் விக்கெட் வீழ்த்தினார் தீபக் சாஹர்.
விஜேடி முறைப்படி ராஜஸ்தான் அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் மனேந்திரா நரேந்திரா சிங் 17 பந்தில் 44 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 105 ரன்கள் அடித்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.