அடுத்த சீசனில் சிஎஸ்கேவில் ஆட ரெடியா இரு.. இளம் வீரருக்கு வாக்கு கொடுத்த தல

By karthikeyan VFirst Published Sep 13, 2019, 4:29 PM IST
Highlights

அஷ்வின், ரெய்னா, ஜடேஜா ஆகிய திறமையான வீரர்களை ஐபிஎல்லின் மூலம் அடையாளம் காட்டிய தோனி, மற்றொரு இளம் வீரர் ஒருவரையும் இந்திய கிரிக்கெட்டுக்கு அடையாளம் காட்டி அவருக்கு நல்ல கெரியர் அமைய காரணமாக அமைந்திருக்கிறார். 

இந்திய டி20 அணியின் பிரைம் பவுலராக உருவெடுத்துள்ளார் தீபக் சாஹர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில், ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆட வாய்ப்பு கிடைத்தபோதும், அதில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அடுத்த ஆண்டு(2020) ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், டி20 அணியில் தீபக் சாஹர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. ஏனெனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் தீபக் சாஹர் எடுக்கப்பட்டுள்ளதோடு, டி20 தொடர்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. எனவே அவரை டி20 அணியின் பிரைம் பவுலராக இந்திய அணி நிர்வாகம் பார்க்கிறது என்பது உறுதியாகிவிட்டது. 

தீபக் சாஹர் நல்ல திறமையான பவுலர் மட்டுமல்லாது நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். அவர் திறமையான வீரராக இருந்தபோதிலும், அவரது திறமையை இந்த உலகிற்கு காட்டியது சிஎஸ்கே அணிதான். அதுவும் தல தோனி தான். 

அஷ்வின், ரெய்னா, ஜடேஜா ஆகிய திறமையான வீரர்களை ஐபிஎல்லின் மூலம் அடையாளம் காட்டிய தோனி, தீபக் சாஹருக்கும் அதை செய்தார். தீபக் சாஹர், 2016ம் ஆண்டே ஐபிஎல்லுக்கு வந்துவிட்டார். ஆனால் ஆடும் லெவனில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத தீபக் சாஹரை அடையாளம் கண்டது தோனி தான். 

தோனியின் கண்ணில் பட்ட பின்னர், தீபக் சாஹரின் கெரியரில் நடந்த மாற்றங்களை பார்ப்போம். கிரிக்பஸ் இணையதளத்திற்கு தீபக் சாஹர் அளித்த பேட்டியில், தனக்கு தோனி கொடுத்த வாய்ப்பு பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய தீபக் சாஹர், வலைப்பயிற்சியில் நான் பேட்டிங் ஆடியதை கண்டு தோனி என்மீது நல்ல அபிப்ராயம் வைத்தார். நான் பவுலிங் வீசுவதையும் தோனி பார்த்தார். எனது திறமையால் கவரப்பட்ட தோனி, என்னை ஆடும் லெவனில் சேர்க்க விரும்பினார். ஆனால் 2016 சீசனில் காயத்தால் என்னால் ஆடமுடியாமல் போனது. அடுத்த சீசனில் ஸ்மித் கேப்டனாகிவிட்டார். அவர் எனக்கு வாய்ப்பு தரவில்லை. 

2017 ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று வெளியேறிய பின்னர், தோனியிடம் சென்று, எனது திறமையை மேலும் வளர்த்துக்கொள்வது குறித்து கேட்டேன். அவர் என்னிடம், அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட தயாராக இரு என்றார். அதேபோலவே 2018 சீசனில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டேன். 2018, 2019 ஐபிஎல்லில் ஆடியதற்கு பிறகே எனக்கு அடையாளம் கிடைத்தது என்றார் தீபக் சாஹர். 

தீபக் சாஹர் 2018 ஐபிஎல்லில் 12 போட்டிகளில் ஆடி வெறும் 10 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஆனால் கடந்த சீசனில் 17 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர், அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆவார். அதன்பின்னர் தான் இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு தீபக் சாஹருக்கு கிடைத்தது. 
 

click me!