ஃபகர் ஜமானுக்கு ஏய்ப்பு காட்டி ரன் அவுட் ஆக்கிய டி காக்..! வீடியோ

By karthikeyan VFirst Published Apr 5, 2021, 6:07 PM IST
Highlights

2வது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருக்க வேண்டிய ஃபகர் ஜமானை தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் ஏய்ப்பு காட்டி ரன் அவுட்டாக்கினார்.
 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டி காக்(80), டெம்பா பவுமா(92), வாண்டெர் டசன்(60), டேவிட் மில்லர்(50) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 341 ரன்களை குவித்தது.

342 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ஃபகர் ஜமானை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் ஃபகர் ஜமான் சிறப்பாக ஆட, மறுமுனையில் இமாம் உல் ஹக்(6), பாபர் அசாம்(31), முகமது ரிஸ்வான்(0), டானிஷ் அஜீஸ்(9), ஷதாப் கான்(13), ஆசிஃப் அலி(19), ஃபஹீம் அஷ்ரஃப்(11) என தொடக்கம் முதலே, எந்த வீரருமே ஃபகர் ஜமானுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனி ஒருவனாக போராடிய ஃபகர் ஜமான், சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடி இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்ததுடன், பாகிஸ்தான் அணியையும் இலக்கை நோக்கி பயணிக்க செய்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி கட்டத்தில் நெருக்கடி அதிகரிக்க, கடைசி ஓவரில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபகர் ஜமான். கடைசி ஓவரின் முதல் பந்தில் 9வது விக்கெட்டாக ஃபகர் ஜமான் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 312 ரன்கள். இதையடுத்து 50 ஓவரில் பாகிஸ்தான் அணி 324 ரன்கள் அடிக்க, 17 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஃபகர் ஜமான் ரன் அவுட்டான விதம் சர்ச்சையை கிளப்பியது. ஃபகர் ஜமானை டி காக் ஏய்ப்பு காட்டி அவுட்டாக்கிவிட்டார். கடைசி ஓவரின் முதல் பந்தை லாங் ஆஃப் திசையில் அடித்த ஃபகர் ஜமான், ஒரு ரன் ஓடி முடித்துவிட்டு 2வது ரன் ஓடினார். கிட்டத்தட்ட க்ரீஸுக்கு பக்கத்தில் வந்துவிட்ட ஃபகர் ஜமான் எளிதாக 2வது ரன்னை ஓடி முடித்திருக்கக்கூடும். ஆனால் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக், த்ரோ பவுலிங் முனைக்கு வருவதை போல பொய்யாக சைகை காட்டினார். 

டி காக்கின் செயலில் ஏமாந்து ஃபகர் ஜமான் திரும்பி பார்க்க, பந்தை லாங் ஆஃப் திசையில் பிடித்த மார்க்ரம், நேரடியாக பேட்டிங் முனைக்கு துல்லியமாக த்ரோ விட, அது நேரடியாக ஸ்டம்ப்பை தாக்க ஃபகர் ஜமான் அவுட்டானார். குயிண்டன் டி காக், பேட்ஸ்மேனான ஃபகர் ஜமானை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஏமாற்றியது விதிப்படி தவறுதான் என்றாலும், இதில் முடிவெடுக்கும் அதிகாரம் அம்பயர்களுக்கு உள்ளது. டி காக்கின் சாமர்த்தியத்தால் இரட்டை சதத்தை தவறவிட்டு 193 ரன்னில் ஆட்டமிழந்தார் ஃபகர் ஜமான்.
 

Such a Dirty Act from de Cock, Shameful!!
It could be a Double Hundred by Fakhar!
pic.twitter.com/Zy5OoPiFXn

— Muhammad Ali (@MuhammadAli_11)
click me!