ரொனால்டோவின் துணிச்சல் வார்னருக்கு வருமா? இரட்டை மனநிலையில் மேசையிலிருந்து நீக்கிய கோலாவை மீண்டும் வைத்தார்

By karthikeyan VFirst Published Oct 29, 2021, 2:24 PM IST
Highlights

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேசையின் மீதிருந்த கோகோ கோலா பாட்டில்களை அதிரடியாக அகற்றினார் ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.
 

டி20 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னரின் அதிரடி அரைசதத்தின்(42 பந்தில் 65 ரன்கள்) உதவியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த டேவிட் வார்னர், இலங்கைக்கு எதிராக ஃபார்முக்கு திரும்பி, அவரது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடியது ஆஸ்திரேலிய அணிக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்திருப்பதுடன், இந்த தொடரில் அவரது ஃபார்ம் அந்த அணிக்கு மிக மிக முக்கியம்.

இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் அதிரடி காட்டிய வார்னர், அதே ஃபார்முடன் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு சென்றதால், அங்கும் செம ஃபார்ம் காட்டினார். யூரோ கால்பந்தாட்ட தொடரின்போது போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ, செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை நீக்கினார். அதேபோலவே டேவிட் வார்னரும் கோலா பாட்டில்களை அகற்றினார்.

ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான போட்டிக்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வார்னர் கலந்துகொண்டார். அப்போது மேசையின் மீதிருந்த கோலா பாட்டில்களை அகற்றுவதற்காக கையில் எடுத்தார். பின்னர், இதை கண்டிப்பாக வைக்க வேண்டுமா என்று கேட்டுவிட்டு மேசையின் மீது வைத்தார். அதை வைக்கும்போது, இது ரொனால்டோவுக்கு நல்லது என்றால், எனக்கும் பிரச்னையில்லை என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு கோலா பாட்டில்களை வைத்தார்.

யூரோ கால்பந்து தொடரின்போது ஹங்கேரி அணிக்கெதிரான போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரொனால்டோ, மேசையின் மீதிருந்த கோலா பாட்டில்களை நீக்கினார். அங்கிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடியுங்கள் என்ற செம மெசேஜை ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கூறினார்.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட் அணிக்கான அடுத்த 10 வருஷத்துக்கான பக்கா ‘ப்ளூபிரிண்ட்”டுடன் வருகிறார் ராகுல் டிராவிட்

ரொனால்டோவின் இந்த செயலால் உலகளவில் கோலாவின் பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. சுமார் 520 கோடி டாலர் மதிப்பில் இழப்பை  சந்தித்தது கோலா நிறுவனம். 

ரொனால்டோ மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் கோலா பாட்டில்களை கேமரா ஃப்ரேமிலிருந்து ஓரங்கட்டி வைத்தார். ஆனால் வார்னரோ, இரட்டை மனநிலையில் நீக்க முயன்று, பின்னர் அதை மேசையின் மீதே வைத்துவிட்டார். வார்னரின் செயலை பார்க்கும்போது, உண்மையாகவே அவர் கோலா உடல்நலத்திற்கு கேடு என்பதற்காக அதை நீக்க முயன்றதாக தெரியவில்லை. ரொனால்டோ செய்ததை நினைவூட்டும் விதமாக காமெடியாக நீக்க முயன்றதாகவே தெரிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

pic.twitter.com/wfInzxvKoq

— Hassam (@Nasha_e_cricket)

கோலா பாட்டிலை நீக்குவது போன்று நடித்துவிட்டு, பின்னர் பின்வாங்கிய வார்னரின் செயலை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தும், விமர்சித்தும் வருகின்றனர்.
 

click me!