இலங்கைக்கு எதிராக ஃபார்முக்கு திரும்பி அதிரடி அரைசதம் அடித்த வார்னர்! இலங்கையை துவம்சம் செய்து ஆஸி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 28, 2021, 10:48 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 7  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதின. இரு அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்த போட்டியில் ஆடின.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பனி, 2வது இன்னிங்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; 2வது இன்னிங்ஸில் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதால், முதலில் பந்துவீசிவிட்டு இலக்கை விரட்ட முடிவு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்.

ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

கடந்த போட்டியில் ஆடாத இலங்கை அணியின் மாயாஜால ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா இந்த போட்டியில் ஆடுவதால்,  பினுரா ஃபெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை அணி:

குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா 7 ரன்னில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்காவும் குசால் பெரேராவும் இணைந்து அருமையாக ஆடினர்.  மேக்ஸ்வெல் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசி அசத்திய அசலங்கா, அதன்பின்னர் தனது அதிரடியை தொடர்ந்தார். அசலங்காவும் பெரேராவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய அசலங்கா மற்றும் பெரேரா ஆகிய இருவரும் தலா 35 ரன்களில் முறையே 10 மற்றும் 11வது ஓவர்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு பிரச்னை ஆரம்பித்தது.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஏமாற்றமளித்து தலா 4 ரன்களில் வெளியேற, ராஜபக்சா அதன்பின்னர் பொறுப்பை  தனது தோள்களில் சுமந்து அதிரடியாக அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 26 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் அடிக்க, 20 ஒவரில் இலங்கை அணி 154 ரன்கள் அடித்து 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது.

155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் ஃபார்மில் இல்லாத தொடக்க வீரர்கள் வார்னர்மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பினர். ஃபின்ச்சும் வார்னரும் ஃபார்மில் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பிரச்னையாக இருந்துவந்த நிலையில், இலங்கை பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து இருவரும் ஃபார்முக்கு வந்தனர்.

ஃபின்ச் தொடக்கம் முதலே அடித்து ஆட, வார்னர் ஆரம்பத்தில் சற்று நிதானம் காத்து அதன்பின்னர் அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய ஃபின்ச் 23 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மேக்ஸ்வெல் 5 ரன்னுக்கு மேக்ஸ்வெல்லின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வார்னருடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். வார்னர் களத்தில் செட்டில் ஆகிக்கொண்டிருந்த நிலையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இலங்கை விக்கெட் கீப்பர் குசால் பெரேரா தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி பவுண்டரிகளாக விளாசி தள்ளிய வார்னர் 31 பந்தில் அரைசதம் அடித்தார். கடந்த சில மாதங்களாகவே ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த வார்னர் ஃபார்முக்கு திரும்பியது, அவருக்கு மட்டுமல்லாது ஆஸ்திரேலிய அணிக்கும் ரொம்ப நல்லது.

42 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்களை குவித்து வார்னர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஸ்டீவ் ஸ்மித்தும் சேர்ந்து இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, க்ரூப் 1-க்கான புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
 

click me!