IND vs NZ இனிமேல் இந்த டெஸ்ட்டில் நியூசிலாந்து கம்பேக்கொடுக்க வாய்ப்பே இல்ல.. கோலியின் முடிவு சரி - வெட்டோரி

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 10:02 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில், நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்கும் வாய்ப்பு இருந்தும் கூட, இந்திய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடும் முடிவு சரியானதுதான் என்று டேனியல் வெட்டோரி கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, மயன்க் அகர்வாலின் அபார சதம் (150), அக்ஸர் படேலின் பொறுப்பான அரைசதம் (52) மற்றும் ஷுப்மன் கில் (44), ரிதிமான் சஹா (27) ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையுமே நியூசிலாந்தின் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் தான் வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஜிம் லேக்கர் (1956) மற்றும் அனில் கும்ப்ளேவிற்கு (1999) அடுத்த 3வது பவுலர் என்ற சாதனையை படைத்தார் அஜாஸ் படேல். இந்திய அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பவுலர் அஜாஸ் படேல் தான்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 263 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் அடித்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்கள் முன்னிலை பெற்று, நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்கும் வாய்ப்பு இருந்தும் கூட, இந்திய அணி அதை செய்யாமல் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்துக்கு இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய முடிவு, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. விராட் கோலியின் இந்த முடிவை பலர் விமர்சிக்கவும் செய்தனர்.

ஆனால் விராட் கோலியின் அந்த முடிவில் எந்த தவறும் இல்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டேனியல் வெட்டோரி, இந்திய அணி வெறு 28-29 ஓவர்கள் மட்டுமே வீசியது. பவுலர்களுக்கு ஓய்வு கூட தேவைப்பட்டிருக்காது. எனவே விராட் கோலி நினைத்திருந்தால் நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. விராட் கோலியின் அந்த முடிவில் எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால்  கோலியின் அந்த முடிவால், நியூசிலாந்து அணியால் இனிமேல் கம்பேக் கொடுக்கவே முடியாது என்று டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
 

click me!