அம்பாதி ராயுடு, டுப்ளெசிஸ் அரைசதம்..! கடைசி நேர சாம் கரனின் காட்டடி.. சிஎஸ்கே அபார வெற்றி

By karthikeyan VFirst Published Sep 19, 2020, 11:39 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 

ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டி அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித்தும் டி காக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் 4 ஓவர்களிலேயே 48 ரன்களை சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் ஐந்தாவது ஓவரிலேயே 12 ரன்களில் அவுட்டாக, அடுத்த ஓவரிலேயே 33 ரன்களில் டி காக் ஆட்டமிழந்தார்.
 
அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது சிஎஸ்கே அணி. ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ் ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சவுரப் திவாரி மட்டுமே 31 பந்தில் 42 ரன்கள்  அடித்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸின் பவர் ஹிட்டர்கள் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகியோர் சொதப்பியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்து 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

163 என்ற ரெண்டுங்கெட்டான் இலக்கை விரட்ட சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சனும் முரளி விஜயும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட், முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷேன் வாட்சனை 4 ரன்களில் வீழ்த்த, அதற்கடுத்த ஓவரிலேயே முரளி விஜயை ஒரு ரன்னில் வீழ்த்தினார் ஜேம்ஸ் பாட்டின்சன். 

முதல் 2 ஓவர்களிலேயே தொடக்க வீரர்கள் இருவரையுமே சிஎஸ்கே அணி இழந்தது. இதையடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அனுபவ வீரர்கள் டுப்ளெசிஸும் அம்பாதி ராயுடுவும், தங்களது அனுபவத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர்.

பவர்ப்ளே முடிவில் வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. ஆனாலும் விக்கெட்டை இழந்துவிடாமல் சீரான வேகத்தில் அவசரப்படாமல் ஆடி, கடைசி வரை போட்டியை கொண்டு சென்றாலே வெற்றி பெறக்கூடிய இலக்குதான் என்பதை உணர்ந்து ஆடினர். 

டுப்ளெசிஸ் ஒருமுனையில் நிதானமாக ஆட, மறுமுனையில் அம்பாதி ராயுடு, பும்ரா, ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார். ஆறாவது ஓவரில் முதல் சிக்ஸரை விளாசிய ராயுடு, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தள்ளினார். விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடிய அதேவேளையில் அடித்து ஆடி ஸ்கோரும் செய்தார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அம்பாதி ராயுடு,   48 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து ராகுல் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். ராயுடு தூக்கியடித்த பந்தை, பந்துவீசிய ராகுல் சாஹரே பின் திசையில் ஓடிச்சென்று அருமையாக கேட்ச் பிடித்தார். 3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸும் ராயுடுவும் இணைந்து 115 ரன்களை குவித்தனர். 

ராயுடு ஆட்டமிழந்தாலும், வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டே சென்றார். அதன்பின்னர் ஜடேஜா 11 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆல்ரவுண்டர் சாம் கரன், க்ருணல் பாண்டியா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசி வேலையை எளிதாக்கினார்.  ஆறு பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். கடைசி வரை களத்தில் நின்று அரைசதம் அடித்து 44 பந்தில் 58 ரன்களை விளாசி அணியை வெற்றி பெற செய்தார் டுப்ளெசிஸ்.

இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியதுடன், புள்ளி பட்டியலில் கணக்கை தொடங்கி முதலிடத்தில் உள்ளது.
 

click me!