
மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் விதர்பாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) போட்டியில் 49 பந்துகளில் சதம் அடித்து, தொழில்முறை கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் முதல் தரம், லிஸ்ட் ஏ மற்றும் டி20 சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அவர் 53 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இதன் மூலம் மும்பை அணி 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆயுஷ் மத்ரே 18 வயது மற்றும் 135 நாட்களில் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இளம் வீரர் ஆனார். இதற்கு முந்தைய சாதனையை ரோஹித் சர்மா 19 வயது மற்றும் 339 நாட்களில் செய்திருந்தார்.
ஆயுஷ் மத்ரே மற்றும் ரோகித்துக்குப் பிறகு, உன்முக்த் சந்த் 20 வயதில் இந்த மைல்கல்லை எட்டிய மற்றொரு வீரராக உள்ளார். ஆயுஷ் மத்ரேவின் அபாரமான இன்னிங்ஸ் மும்பையின் 193 ரன்கள் சேஸிங்கை எளிதாக்கியது. அவருக்கு ஷி வம் துபே வலுவான ஆதரவளித்தார், அவர் வெறும் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.
சிக்சர் மழை பொழிந்தார்
முதலில் பேட்டிங் செய்த விதர்பா, 20 ஓவர்களில் 192/9 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. அதர்வா டைடே மற்றும் அமன் மொகாடே ஆகியோரின் அரைசதங்கள் அவர்களின் இன்னிங்ஸுக்கு வலு சேர்த்தன.
193 ரன்களைத் துரத்திய மும்பை அணியின் சேஸிங்கை ஆயுஷ் மத்ரே பவுண்டரிகளாக விரட்டினார். அவரது 110 ரன்களில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடங்கும். அவரது சதம் விதர்பா பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது மற்றும் 193 ரன்கள் இலக்கை எளிதாக்கியது.
ஆசிய கோப்பைக்கான கேப்டன் ஆயுஷ் மத்ரே
ஷிவம் துபே அவருக்கு நன்கு ஆதரவளித்து, 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ரன் வேகத்தைத் தக்கவைத்தார். இந்த சீசனில் ஏற்கனவே சூப்பராக விளையாடியுள்ள மத்ரே சிறந்த ஃபார்மில் உள்ளார், இது இந்தியா U19 அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய இரண்டிற்கும் நல்ல அறிகுறியாகும். குறிப்பாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) ஆசிய கோப்பைக்கான ஆண்கள் U19 அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அறிவித்தது. இந்திய அணிக்கு ஆயுஷ் மத்ரே கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.