டிவில்லியர்ஸை வேண்டாம்னு ஒதுக்குனதுல எந்த வருத்தமும் இல்ல.. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Jun 7, 2019, 10:21 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதும், டிவில்லியர்ஸ் குறித்த ஒரு தகவல் வெளியானது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்தும்கூட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாக வெளிவந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 

உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. 

ஆனாலும் அவரது இடத்திற்கு மற்றொரு வீரரரை தயார் செய்து உலக கோப்பையில் ஆடவைத்தது தென்னாப்பிரிக்க அணி. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் தான் பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டெய்ன், இங்கிடி ஆகியோரின் காயம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்டெய்ன் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இங்கிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்பு.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதும், டிவில்லியர்ஸ் குறித்த ஒரு தகவல் வெளியானது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்தும்கூட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்திருந்தது. 

உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், டிவில்லியர்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்டு உலக கோப்பையில் ஆட விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் ஓய்வு அறிவித்துவிட்டு ஓராண்டாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸை திடீரென உலக கோப்பை அணியில் எடுக்க முடியாது என்பதால் டிவில்லியர்ஸின் கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.  மேலும் டிவில்லியர்ஸின் விருப்பத்தை ஏற்று அவரை மீண்டும் அணியில் சேர்த்தால், அவர் இல்லாத ஓராண்டில் அவரது இடத்தில் ஆடிவரும் வீரரை ஏமாற்றுவதாக அமைந்துவிடும் என்பதாலும் டிவில்லியர்ஸின் விருப்பத்தை ஏற்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வந்தது.  

டிவில்லியர்ஸ் குறித்த இந்த செய்தி உலகளவில் காட்டுத்தீயாய் பரவ, அதுகுறித்து தென்னாப்பிரிக்க அணி தேர்வுக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்ட நாளில், அணியை அறிவிப்பதற்கு முன்னதாக கேப்டன் டுபிளெசிஸ் வாயிலாக டிவில்லியர்ஸின் விருப்பம் தேர்வுக்குழுவுக்கு தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக கோப்பைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடியிருக்க வேண்டும் என்பது தேர்வுக்கொள்கை. ஆனால் டிவில்லியர்ஸ் ஓராண்டாக தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடாததால் அவரை திடீரென அணியில் எடுக்க முடியாது. மேலும் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு பெற்றதால் அவரது இடம் பெரும்பாடு பட்டு நிரப்பப்பட்டுள்ளது. டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்புக்கு பிறகு அணியில் எடுக்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக ஆடும் நிலையில், அவர்களை எடுப்பதுதான் தார்மீக ரீதியாக சரியான விஷயம். தேர்வுக்கொள்கையை டிவில்லியர்ஸ் பூர்த்தி செய்யாததால் அவரை அணியில் எடுக்க முடியவில்லை. அவரை எடுத்திருந்தால், அது கடந்த ஓராண்டாக அணியில் ஆடிய மற்ற வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகிவிடும். அதனால் தான் டிவில்லியர்ஸை எடுக்கவில்லை. டிவில்லியர்ஸை எடுக்காதது குறித்து எந்த வருத்தமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

click me!