மிட்செல் ஸ்டார்க் மிரட்டல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

By karthikeyan VFirst Published Jun 6, 2019, 11:37 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நாட்டிங்காமில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய பணித்தார். ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபின்ச், வார்னர், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல் ஆகிய நால்வரும் 38 ரன்களுக்குள் விக்கெட்டை பறிகொடுத்தனர். 38 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர்.

ஆனால் ஸ்டோய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அலெக்ஸ் கேரி 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஸ்மித், 73 ரன்களில் ஆட்டமிழக்க, 8ம் வரிசையில் களமிறங்கிய நாதன் குல்டர்நைல் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். குல்டர்நைலின் கடைசிநேர அதிரடியால் 288 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

289 ரன்கள் என்ற இலக்குடன்  களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லெவிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆடினார். ஆனால் அவருக்கு ஒரே ஓவரில் இரண்டுமுறை அம்பயர் தவறாக அவுட் கொடுக்க, கெய்ல் ரிவியூ எடுத்து தப்பித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட தொடங்கிய கெய்ல், ஸ்டார்க்கின் பந்தில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஷாய் ஹோப்பும் பூரானும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஆனால் ஹோப் அவசரப்பட்டு தவறான ஷாட் ஆடி 40 ரன்களில் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். ஹெட்மயர் 21 ரன்களில் ரன் அவுட்டானார். களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஹோப், 68 ரன்களில் பாட் கம்மின்ஸின் ஸ்லோ டெலிவரியில் வீழ்ந்தார். ஆண்ட்ரே ரசல் வெறும் 15 ரன்னில் நடையை கட்ட, கேப்டன் ஹோல்டரும் பிராத்வெயிட்டும் சிறப்பாக ஆடி வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஹோல்டரும் அரைசதம் அடித்து நம்பிக்கையுடன் ஆடினார். ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் வசம் இருந்த நிலையில், 46வது ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரில் பிராத்வெயிட் மற்றும் ஹோல்டர் ஆகிய இருவரின்  விக்கெட்டுகளையும் வீழ்த்த, போட்டி முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

கடைசி ஓவரில் நர்ஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்கள் மட்டுமே அடித்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் மிட்செல் ஸ்டார்க், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!