கடந்த பத்தாண்டின் தலைசிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் அணி.. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வில் 3 இந்திய வீரர்கள்

By karthikeyan VFirst Published Dec 24, 2019, 11:35 AM IST
Highlights

கடந்த பத்தாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடிய சிறந்த வீரர்களை கொண்ட 11 வீரர்களை கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்து அறிவித்துள்ளது. 
 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ள பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் தோனி ஆகிய மூன்று இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

ரோஹித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 2013ம் ஆண்டுக்கு முன்னர் பெரியளவில் சோபிக்காத ரோஹித் சர்மா, தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர், 2013ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து அசத்தினார். அதன்பின்னர் அதே ஆண்டில், இலங்கைக்கு எதிராக மறுபடியும் இரட்டை சதமடித்த ரோஹித் சர்மா, 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனை படைத்தார். 

அதன்பின்னர் 2017ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதமடித்த ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையுடன் கிரிக்கெட் அரங்கில் கெத்தாக வலம்வருகிறார். எனவே இந்த பத்தாண்டின் சிறந்த தொடக்க வீரர்களில், மற்றொருவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதன்மையான ஒரு தொடக்க வீரர் கண்டிப்பாக ரோஹித் சர்மா தான். 2019 உலக கோப்பையில் 5 சதங்களை அடித்து சாதனை படைத்தார். இவ்வாறு சாதனைகளை குவித்துவரும் ரோஹித் சர்மாவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பத்தாண்டின் சிறந்த அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளது. 

மூன்றாம் வரிசையில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 3ம் வரிசையில் கடந்த பத்தாண்டில் கோலிக்கு நிகரான 3ம் வரிசை வீரர் கண்டிப்பாக இல்லை. 

நான்காம் வரிசைக்கு டிவில்லியர்ஸையும் ஐந்தாம் வரிசை வீரராக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனையும் ஆறாம் வரிசையில் ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, விக்கெட் கீப்பர் - கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ளது. தோனியின் தலைமையில் கடந்த பத்தாண்டில் இந்திய அணி நல்ல வளர்ச்சியை அடைந்ததோடு, வெற்றிகளையும் குவித்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது. 2011 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலக கோப்பையில் அரையிறுதி வரை வந்தது என தோனியின் தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி நிறைய வெற்றிகளை குவித்தது. எனவே தோனியை இந்த அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளது. 

ஸ்பின் பவுலராக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கானையும் ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட் மற்றும் லசித் மலிங்காவையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த கடந்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணி:

1. ரோஹித் சர்மா(இந்தியா)

2. ஹாஷிம் ஆம்லா(தென்னாப்பிரிக்கா)

3. விராட் கோலி(இந்தியா)

4. ஏபி டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா)

5. ஷகிப் அல் ஹசன்(வங்கதேசம்)

6. ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து)

7. தோனி(இந்தியா) - கேப்டன்

8. ரஷீத் கான்(ஆஃப்கானிஸ்தான்)

9. மிட்செல் ஸ்டார்க்(ஆஸ்திரேலியா)

10. டிரெண்ட் போல்ட்(நியூசிலாந்து)

11. லசித் மலிங்கா(இலங்கை)


 

click me!