எப்பேர்ப்பட்ட திறமையான பிளேயர் அவரு.. அவர ஏன் ஓரங்கட்டுனீங்க..? இந்திய அணிக்கு கெய்லின் நறுக் கேள்வி

By karthikeyan VFirst Published Apr 30, 2019, 12:41 PM IST
Highlights

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூன்று பேரும் ஸ்பின் பவுலர்களாக ரிஸ்ட் ஸ்பின் ஜோடி குல்தீப் - சாஹல் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளனர். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் நீடித்து வந்த நான்காம் வரிசை சிக்கலுக்கு விஜய் சங்கரின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. உலக கோப்பை அணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நான்காம் வரிசை வீரருக்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய மூன்று பேரும் ஸ்பின் பவுலர்களாக ரிஸ்ட் ஸ்பின் ஜோடி குல்தீப் - சாஹல் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளனர். அனுபவ ஸ்பின்னரான அஷ்வினை கண்டிப்பாக உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என காம்பீர் வலியுறுத்தியிருந்தார். 

ஆனால் அஷ்வின் கடந்த 2 ஆண்டுகளாகவே ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு அஷ்வினுக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்து அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டனர். 

எனினும் அஷ்வினின் அனுபவ ஸ்பின்னும் அவரது பேட்டிங்கும் உலக கோப்பையில் பயன்படும் என்பதால் அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என்பது தெரிந்த விஷயம்தான். அதேபோலவே அஷ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இதற்கிடையே ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் அஷ்வின், சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது கேப்டன்சியையும் ஒரு கேப்டனாக முக்கியமான நேரங்களில் தயங்காமல் அதிரடி முடிவெடுக்கும் அவரது திறனையும் முன்னாள் வீரர்கள் பாராட்டியுள்ளனர். ஒரு கேப்டனாக முன்னின்று அணியை வழிநடத்தி செல்கிறார். ஒரு கேப்டனாகவும் ஸ்பின்னராகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அஷ்வின். 

இந்நிலையில், அஷ்வின் உலக கோப்பை அணியில் நிராகரிக்கப்பட்டது குறித்து அவரது தலைமையில் பஞ்சாப் அணியில் ஆடும் கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கெய்ல், அஷ்வின் ஏன் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் என தெரியவில்லை. அவர் இந்திய அணியின் மிகச்சிறந்த அபாரமான பவுலர். நல்ல பவுலர் மட்டுமல்லாமல் சிறந்த கேப்டனும் கூட. அவரது திறமையின் மீது அபாரமான நம்பிக்கை வைத்துள்ளவர் அஷ்வின். அவரது திறமையின் மீது மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக அவரது அணியின் மீது நம்பிக்கை கொண்டவர் என அஷ்வினை கெய்ல் புகழ்ந்துள்ளார். 
 

click me!