
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாகவும், இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டுவருகிறது.
ஆனால் அப்படி எந்தவிதமான விரிசலும் இல்லை. ரோஹித்துக்கும் தனக்கும் இடையே நல்ல புரிதலும் நல்ல உறவும் இருப்பதாக விராட் கோலி பலமுறை தெரிவித்திருக்கிறார். இதையே ரோஹித் சர்மாவும் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுமாதிரியான சர்ச்சை கருத்துகள் உலா வந்தாலும், அவற்றிற்கு மத்தியில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் ரோஹித் - கோலி இடையேயான மோதல் என்ற பேச்சு ஹாட் டாபிக்கானது. ரோஹித் - கோலி இடையேயான மோதல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
அதுகுறித்து தெளிவுபடுத்திய ரோஹித் சர்மா, தங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்று திடமாக கூறினார். இதுகுறித்து பேசிய கோலி, தங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்று இரண்டரை ஆண்டுகளாக கூறி கூறியே சோர்வடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, ரோஹித் - கோலி இடையே எந்த பிரச்னையும் இல்லை. அனைத்தும் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற செய்திகளை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வரும். அவர்கள் இருவருக்கும் இடையே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையும் திட்டமிடலும் உள்ளது. எனது இடத்தில் நீங்கள் இருந்தால், அவர்கள் எப்படி ஒற்றுமையாக ஒரு குடும்பத்தை போல செயல்படுகிறார்கள் என்று தெரியும் என்று சேத்தன் ஷர்மா கூறியுள்ளார்.