ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 16வது சீசன் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிரசாந்த் சோலங்கி, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், மார்க் உட், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து லக்னோ அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் ருத்ரதாண்டவம் ஆடினார். கடந்த போட்டியில் 92 ரன்களை குவித்த ருதுராஜ், விட்ட இடத்தில் இருந்து இன்னிங்ஸை தொடர்வது போல ஆடினார்.
அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 25 பந்தில் அரைசதம் அடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். அவருடன் இணைந்து டெவான் கான்வேவும் அடித்து ஆட, பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. ஐபிஎல்லில் சென்னை சேப்பாக்கத்தில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது சிஎஸ்கே அணி. மேலும் ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் தங்களது 3வது அதிகபட்ச ஸ்கோரை அடித்தது.
அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் விக்கெட்டுக்கு சிஎஸ்கே அணி 110 ரன்களை குவித்தது. டெவான் கான்வே 29 பந்தில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 16 பந்தில் 27 ரன்கள் அடித்து கேமியோ ரோல் செய்தார். மொயின் அலி 13 பந்தில் 19 ரன்கள் அடித்தார். அம்பாதி ராயுடு 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்களையும், தோனி 3 பந்தில் 2 சிக்ஸர்களையும் விளாச, 20 ஓவரில் 217 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.
218 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 18 பந்தில் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ், இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 22 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்களை விளாசினார். தீபக் ஹூடா(2) மற்றும் க்ருணல் பாண்டியா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா ஆகிய மூவரையும் வீழ்த்திய மொயின் அலி, மார்கஸ் ஸ்டோய்னிஸையும் 21 ரன்களுக்கு வீழ்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து லக்னோ அணியின் கடைசி நம்பிக்கையாக திகழ்ந்த நிகோலஸ் பூரனும் 18 பந்தில்32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆயுஷ் பதோனி கடைசிவரை களத்தில் இருந்தும் கூட லக்னோ அணியால் 20 ஓவரில் 205 ரன்கள் அடித்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
4 ஆண்டுகள் கழித்து சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக ஆடி லக்னோ அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.