தோனி இல்லாத குறையை தீர்த்த சாஹல்.. சாஹலின் சொல்லுக்கு கட்டுப்பட்ட கேப்டன் கோலி.. வீடியோ

By karthikeyan VFirst Published Feb 8, 2020, 4:41 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோனி இல்லாத குறையை சாஹல் தீர்த்துவைத்தார். சாஹலின் சொல்லுக்கு கேப்டன் கோலி கட்டுப்பட்டு சென்றார். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனியின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக அவரது ஓய்வு அறிவிக்கப்படவில்லையே தவிர, கெரியர் முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை. 

இந்திய அணியில் இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதுடன், அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பாக ஆடுவதால், தோனி இல்லாத குறையே தெரியவில்லை. தோனி என்ற மிகப்பெரிய ஜாம்பவான் அணியில் இல்லையென்ற போதிலும், அது இந்திய அணியின் வெற்றிகளை பெரிதாக பாதித்துவிடவில்லை. 

தோனி களத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், டி.ஆர்.எஸ் முடிவுகளை எடுப்பதற்கும் கேப்டன் கோலிக்கு உதவிகரமாக இருந்தார். தோனி ஆடாத நிலையில், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்ட இடைப்பட்ட காலத்தில் டி.ஆர்.எஸ் விவகாரத்தில் தவறான ஆலோசனைகளைத்தான் அதிகமாக வழங்கினார். 

தற்போது ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெறுவதேயில்லை. கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டி.ஆர்.எஸ் விவகாரத்தில் சரியான முடிவெடுக்க கேப்டன் கோலிக்கு உதவினார் சாஹல். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 273 ரன்கள் அடித்தது. 274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 251 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானதால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது ஷர்துல் தாகூர் வீசிய மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்து, கப்டிலின் கால்காப்பில் பட்டது. அந்த பந்து ஸ்டம்ப்புக்கு நேராக சென்ற பந்துதான். ஆனால் பந்து கால்காப்பில் படுவதற்கு முன்பாக பேட்டில் பட்டது. அதனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் ஷர்துல் தாகூர் பந்து ஸ்டம்ப்புக்கு நேராக சென்றதால், அம்பயர் அவுட் கொடுக்காததை கண்டு பதறியதுடன், ரிவியூ எடுக்க ஆர்வமாக இருந்தார். கேஎல் ராகுல், சாஹல் ஆகிய வீரர்களுடன் கலந்துபேசினார். அப்போது, பந்து பேட்டில் பட்டது என உறுதியாக கூறினார் சாஹல். சாஹல் கூறியதை ஏற்றுக்கொண்ட கேப்டன் கோலி, ரிவியூ எடுக்கவில்லை. கோலி சரியான முடிவெடுக்க சாஹல் உதவியாக இருந்தார். அந்த வீடியோ இதோ..
 

via Gfycat

click me!