உலக கோப்பை இறுதி போட்டியில் அந்த 2 அணிகளும் மோதினால் அனல் பறக்கும்!! அதை பார்க்க நான் ஆவலா இருக்கேன்.. பிரயன் லாரா அதிரடி

By karthikeyan VFirst Published Mar 25, 2019, 12:46 PM IST
Highlights

ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் சவாலான அணியாக திகழும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும். 

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. எனவே அந்த அணியும் சவாலான அணிதான்.

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத வாய்ப்புள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பிரயன் லாரா, உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்கிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி பலமான அணி. அதனால் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அதேநேரத்தில் கடந்த 2017ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அணி வென்றது எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் சீராக ஆடாத அணியாக இருந்தாலும் கூட, எவ்வளவு பெரிய தொடரையும் வெல்வதற்கு தகுதியான வீரர்களை கொண்ட அணி பாகிஸ்தான். வெஸ்ட் இண்டீஸ் அணியும் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஒவ்வொரு போட்டியிலும் அந்த குறிப்பிட்ட நாளில் வெஸ்ட் இண்டீஸின் ஆட்டம் அபாரமானதாக இருந்தால் வெற்றியை பறிக்கக்கூடிய அணி வெஸ்ட் இண்டீஸ். அந்த வகையில் உலகின் எந்த அணியையும் வீழ்த்த வல்லது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி  உலகின் எந்த பகுதியிலும் சிறப்பாக ஆடக்கூடிய அணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதேமாதிரி மீண்டும் அந்த அணிகள் இறுதி போட்டியில் மோதினால் பார்க்க சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார். 
 

click me!