இந்திய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்..? எப்பேர்ப்பட்ட லெஜண்டுகளுடன் பிரயன் லாரா கம்பேர் பண்ணிருக்காரு பாருங்க

By karthikeyan VFirst Published Oct 18, 2019, 12:42 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துவருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்துவருகிறது. 
 

இந்திய அணி எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த பேட்டிங் அணிதான். ஆனால் தற்போது இந்திய அணி மிக வலுவான பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உலகம் முழுவதும் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுக்கின்றனர். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் சிறந்து விளங்கினாலும், பும்ராவின் வருகைக்கு பிறகு உலகளவில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கிறது. 

வித்தியாசமான பவுலிங் ஸ்டைலை கொண்ட பும்ரா, நல்ல வேகத்துடன் மிகத்துல்லியமாக வீசி எதிரணிகளை மிரட்டுகிறார். அவரது துல்லியமான யார்க்கர் மற்றும் பவுன்ஸர்கள் அவரது மிகப்பெரிய பலம். புவனேஷ்வர் குமார் வேகமாக வீசாவிட்டாலும் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். புதிய பந்தில் அபாரமாக வீசவல்லவர். ஷமி நல்ல வேகத்துடன் ஸ்விங்கும் செய்பவர். அதிலும் ஷமியின் ஸ்பெஷலே அவரது ரிவர்ஸ் ஸ்விங் தான். 

உமேஷ் யாதவும் நல்ல வேகத்தில் வீசக்கூடியவர். இவர்கள் அனைவரை காட்டிலும் நீண்ட அனுபவம் கொண்டவர் இஷாந்த் சர்மா. டெஸ்ட் அணியின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக இஷாந்த் சர்மா திகழ்கிறார். இவ்வாறு அனைத்து வகையான திறமையும் கொண்ட நல்ல கலவையிலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருப்பதுதான் சிறப்பு. இவர்கள் தவிர தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனியும் அசத்திவருகின்றனர். 

இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமுமில்லை. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை புகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவும் இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வெகுவாக புகழ்ந்திருக்கிறார். 

இந்திய ஃபாஸ்ட் பவுலிங்கை 1980, 90களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலிங்குடன் ஒப்பிட்டிருக்கிறார் லாரா. இதுகுறித்து பேசியுள்ள லாரா, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் தரத்தை பாருங்கள்.. ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் அபாரமாக வீசுகின்றனர். இந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட், எனக்கு 1980, 90களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை நினைவுபடுத்துகிறது. திறமையான, வலிமையான ரிசர்வ் வீரர்களை பெற்றிருப்பதிலிருந்து ஒரு அணியின் பலத்தை அறியலாம். இந்திய அணியின் ரிசர்வ் ஃபாஸ்ட் பவுலர்களின் வலிமையை பாருங்கள். புவனேஷ்வர் குமார் உட்பட பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர். புவனேஷ்வர் குமாரே ரிசர்வ் வீரர் என்றால் ஃபாஸ்ட் பவுலிங் எந்தளவிற்கு சிறந்தது என்று பாருங்கள். அந்தளவிற்கு தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது என்று லாரா புகழ்ந்துள்ளார்.

வால்ஷ், ஆம்ப்ரூஸ் போன்ற லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர்கள் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தற்போதைய இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை ஒப்பிட்டிருக்கிறார் லாரா. அந்த காலக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் எதிரணி வீரர்களை தங்களது வேகத்திலும் பவுன்ஸரிலும் தெறிக்கவிட்டவர்கள். அவர்களுடன் தற்போதைய நமது பவுலர்களை, அதுவும் லாராவே ஒப்பிட்டிருப்பது, நமது பவுலர்களுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்லாது மிகப்பெரிய கௌரவமும் கூட.

click me!