உலகின் நம்பர் 1 பவுலரை சமாளிக்க லெஜண்ட் லாரா கொடுக்கும் அருமையான ஐடியா

By karthikeyan VFirst Published May 25, 2019, 2:09 PM IST
Highlights

உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவின் பவுலிங்கை சமாளிப்பது எப்படி என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா ஆலோசனை கூறியுள்ளார்.

உலக கோப்பை தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், தற்போது பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என்பதே பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு. 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே இந்த உலக கோப்பை ஒரு ஹை ஸ்கோரிங் உலக கோப்பையாக அமைய உள்ளது தெளிவாகிவிட்டது. இப்படியான ஹை ஸ்கோரிங் தொடரில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் ஸ்கோரை முடிந்தவரை கட்டுப்படுத்துவது அவசியம். அந்த வகையில் இந்திய அணி இந்த உலக கோப்பையின் சிறந்த அணிதான். 

இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க மற்றும் டெத் ஓவர்களை பும்ரா பார்த்துக்கொள்வார். மிடில் ஓவர்களில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் வரிசையை சரித்துவிடுவர். இதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ளது. 

உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா, தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் சிறப்பாக வீசக்கூடியவர். பும்ரா தான் இந்தியாவுக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைவார் என்பதில் ஆச்சரியமில்லை. அவரது வேகத்தையும் வேரியேஷனையும் சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறுகின்றனர். உலக கோப்பையில் பும்ரா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து முக்கிய பங்காற்றவுள்ளார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை. 

இந்நிலையில், பும்ராவின் பவுலிங்கை சமாளிப்பது எப்படி என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா ஆலோசனை கூறியுள்ளார். திறமையான பவுலர்களுக்கு மரியாதை கொடுப்பவரான லாரா, பும்ராவின் பவுலிங்கை அடித்து ஆட முயற்சிக்காமல் அவரது பவுலிங்கில் சிங்கிள் ரொடேட் செய்துவிட்டு மற்றவர்களின் ஓவரை அடித்து ஆட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய லாரா, நான் பும்ராவின் பவுலிங்கில் ஆடினால் சிங்கிள் தட்டிவிட்டு எதிர்முனைக்கு சென்றுவிடுவேன். வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட அபாரமான பவுலர் பும்ரா. பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக அவரது ஓவரில் சிங்கிள்களை அடித்து அவருக்கு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் நிறைய சிங்கிள்கள் அடிக்க முடியும். எனவே பும்ரா ஓவரில் 6 சிங்கிள் அடிக்க முயற்சிக்க வேண்டும். முத்தையா முரளிதரன், சுனில் நரைன் வரிசையில், ஸ்கோர் செய்ய கடினமான பவுலர் பும்ரா. எனவே அவரது பவுலிங்கை அடித்து ஆட நினைக்காமல், அதேநேரத்தில் விக்கெட்டையும் பறிகொடுக்காத அளவிற்கு சிங்கிள் ரோடேட் செய்ய வேண்டும் என பிரயன் லாரா தெரிவித்துள்ளார். 
 

click me!