கிழட்டு பயலேனு கிண்டலடித்த தோனி.. தலயிடம் சவால் விட்டு தோற்ற பிராவோ.. சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published Apr 20, 2020, 10:06 PM IST
Highlights

தோனியிடம் சவால் விட்டு தோற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை பிராவோ வெளியிட்டுள்ளார். 
 

ஐபிஎல்லில் 3 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி சிஎஸ்கே. அதைவிட, பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இதுவரை சிஎஸ்கே ஆடிய 10 சிசன்களில் ஒரு சீசனில் கூட, லீக் சுற்றில் வெளியேறியதில்லை. அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணி சிஎஸ்கே மட்டும்தான். 

சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக கோலோச்சி வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு, அந்த அணியின் கேப்டன் தோனி மட்டுமல்லாது, நல்ல புரிந்துணர்வுள்ள கோர் டீம் வலுவாக அமைந்ததுதான். தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய நால்வரும் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகள்.

சீசனுக்கு சீசன் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கும் பல அணிகளுக்கு மத்தியில், கோர் டீமை வலுவாக அமைத்ததுடன், வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியதன் விளைவாக, அணியின் சூழல் சிறப்பாகவுள்ளது. அதுதான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு காரணம்.

கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் சக வீரர்களுடனும் ரசிகர்களுடனும் உரையாடிவருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பேசிய பிராவோ, 2018ல் ஐபிஎல்லில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

2018 ஐபிஎல் டைட்டிலை சிஎஸ்கே அணி வென்றது. இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. அந்த ஃபைனல் போட்டி முடிந்ததும், தோனிக்கும் பிராவோவிற்கும் இடையே ரன் ஓடும் போட்டி நடந்தது. 3 ரன்கள் ஓடும்போட்டியில் நூலிழையில் பிராவோவை வீழ்த்தி தோனி வென்றார்.

அந்த போட்டி நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து பிராவோ பேசியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பேசிய பிராவோ, அந்த சீசன் முழுவதுமே, நான் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்றும் நான் ஒரு கிழவன் என்றும் தோனி கிண்டலடித்து கொண்டே இருந்தார். அதனால் தோனியிடம் ஒரு சவால்விட்டேன். அந்த சீசன் முடிந்ததும் இருவருக்கும் இடையே ரன் ஓடும் பந்தயம் வைத்துகொள்வோம் என்பதுதான் அந்த சவால். அதன்படித்தான் அந்த பந்தயம் நடந்தது. அதை ஏன், இறுதி போட்டிக்கு பின்னர் வைத்துக்கொண்டோம் என்றால், இடையிலேயே வைத்து காயம் ஏதும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இறுதியாக வைத்தோம் என்று பிராவோ தெரிவித்தார்.
 

click me!