அவருக்கு பந்துவீசும்போது திறமையுடன் அதிர்ஷ்டமும் அவசியம்..! எதிரணி வீரரை புகழ்ந்த புவனேஷ்வர் குமார்

By karthikeyan VFirst Published Jun 27, 2020, 7:18 PM IST
Highlights

ஆண்ட்ரே ரசலின் அதிரடியான பேட்டிங்கை புகழ்ந்து பேசியுள்ளார் புவனேஷ்வர் குமார். 
 

புவனேஷ்வர் குமார் அருமையாக ஸ்விங் செய்யக்கூடிய ஃபாஸ்ட் பவுலர். 2012ம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் ஆடிவரும் புவனேஷ்வர் குமார், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார்.

இந்திய அணிக்காக 21 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 43 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் புவனேஷ்வர் குமார். பும்ரா, ஷமியை போல 140-150 கிமீ வேகத்திற்கெல்லாம் வீசமாட்டார் புவனேஷ்வர் குமார். ஆனால் இரண்டு திசைகளிலும் அருமையாக ஸ்விங் செய்யக்கூடியவர் புவனேஷ்வர் குமார் என்பதால், புதிய பந்தில், எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டிவிடுவார். 

வேகமாக வீசாவிட்டாலும், வேரியேஷன் தான் புவனேஷ்வர் குமாரின் பலம். ஸ்லோ டெலிவரி, யார்க்கர், பவுன்ஸர் என நல்ல கலவையில் வீசுபவர் புவனேஷ்வர் குமார். தனது கெரியரில் ஸ்மித், கேன் வில்லியம்சன், பிரண்டன் மெக்கல்லம், டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ், ஜோ ரூட் ஆகிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ளார். 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடிவரும் புவனேஷ்வர் குமார், ஆண்ட்ரே ரசலின் அதிரடியான பேட்டிங்கை விதந்தோதியுள்ளார். 

ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவில் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தாவிடம் பேசிய புவனேஷ்வர் குமார், எந்த மைதானத்தில் ஆடுகிறோம் என்பது கூட முக்கியம். ஏனெனில் மைதானம் சிறியதாக இருந்தால், பேட்ஸ்மேன்கள் எளிதாக பவுண்டரி, சிக்ஸர்களை விளாசிவிடுவார்கள். எனவே எந்த போட்டியில் ஆடினாலும், பந்துவீசுவதற்கு முன்பு, மைதானத்தின் அளவு குறித்த விழிப்புணர்வும் புரிதலும் வேண்டும். எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமும் தேவை. 

ஆனால் ஆண்ட்ரே ரசல் வலுவானவர். அவர் சரியாக ஆடாத ஷாட்டுகள் கூட சிக்ஸர் தான். கடந்த ஐபிஎல்லில் அவர் ஆடிய விதத்தை நாம் பார்த்தோம். அவருக்கு பந்துவீசும்போது அதிர்ஷ்டம் ரொம்ப முக்கியம். கடந்த ஐபிஎல் சீசனில், நான் உட்பட பல பவுலர்களும் ஆண்ட்ரே ரசலுக்கு காலை நோக்கி யார்க்கர்கள், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்து என கடுமையாக வீசினோம். ஆனால் அவையனைத்தையும் சிக்ஸருக்கு விரட்டினார். அவர் சரியாக ஆடாத பந்து கூட சிக்ஸருக்கு சென்றுவிடும் என்று புவனேஷ்வர் குமார் ஆண்ட்ரே ரசலை புகழ்ந்து பேசினார்.

2018 மற்றும் 2019 ஆகிய ஐபிஎல் சீசன்களில் கேகேஆர் அணி இக்கட்டான மற்றும் தோல்வியின் விளிம்பில் இருந்த பல போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் கேகேஆர் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஆண்ட்ரே ரசல். 2019 ஐபிஎல் சீசனில், 56.66 ரன்கள் என்ற சராசரி மற்றும் 204.81 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன், 510 ரன்களை ரசல் விளாசியது குறிப்பிடத்தக்கது.  
 

click me!