இங்கிலாந்துல இப்ப இதுதான் டிரெண்டு.. வார்னர் பெயரை டேமேஜ் பண்ணாதான் உங்க புத்தகம் போணி ஆகும்.. ஸ்டோக்ஸுக்கு பெய்ன் பதிலடி

By karthikeyan VFirst Published Nov 18, 2019, 1:18 PM IST
Highlights

வார்னரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தை பரபரப்பாக கிளப்பிவிட்டு புத்தகத்தை விற்பனை செய்வதை இங்கிலாந்து வீரர்கள் ஒரு உத்தியாகவே பயன்படுத்துவதாகவும், இதுவே டிரெண்டும் ஆகிவிட்டதாகவும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், பென் ஸ்டோக்ஸை கடுமையாக சாடியுள்ளார். 
 

பென் ஸ்டோக்ஸிற்கு அவரது கெரியரில் 2019ம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. உலக கோப்பை இறுதி போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார். பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்து முதன்முறையாக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். 

அதன்பின்னர் ஆஷஸ் தொடரிலும் அபாரமாக ஆடினார். அதிலும் லீட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவரது இன்னிங்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. உலக கோப்பை ஃபைனலில் அவரது இன்னிங்ஸை மிஞ்சுமளவிற்கான பேட்டிங் அது. 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்று. அதில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்கும் வரலாற்றில் என்றுமே அழிக்கமுடியாத இன்னிங்ஸ்.

லீட்ஸில் நடந்த ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் அடிக்க, அதுவே பரவாயில்லை எனுமளவிற்கு வெறும் 67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி. 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்பட்டது. 

359 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ராய் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, ரூட்டும் டென்லியும் சேர்ந்து அதை செய்து கொடுத்தனர். அரைசதம் அடித்த அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்தது. ஸ்டோக்ஸ் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் பேர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், ப்ராட் என விக்கெட்டுகள் சரிந்தன. 286 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இங்கிலாந்து அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 73 ரன்கள் தேவை. அதன்பின்னர் அதிரடியை கையில் எடுத்தார் ஸ்டோக்ஸ். ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என பாரபட்சம் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

ஸ்டோக்ஸ் ஒருமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கொண்டிருக்க, மறுமுனையில் தனது விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினார் லீச். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், விக்கெட் சரிவிற்கு பின்னர், இக்கட்டான சூழலில் ரிஸ்க் எடுத்து ஆடினார். 70 பந்துகளுக்கு மேல் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டோக்ஸ், 219 ரன்களில் 135 ரன்கள் என்று இன்னிங்ஸை முடித்தார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20, ஒருநாள் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது இந்த டெஸ்ட் போட்டி. 

டெஸ்ட் போட்டி என்றாலே மந்தமாக இருக்கும் என நினைக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, டெஸ்ட் போட்டி தான் கிரிக்கெட்டின் சிறந்த போட்டிமுறை என்பதை மீண்டும் பறைசாற்றியிருக்கிறது இந்த போட்டி. அதற்கு முக்கியமான காரணம் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்.

இப்படி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்த, தனது இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு, வார்னர் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததே காரணம் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். பென் ஸ்டோக்ஸின் புத்தகத்தில், வார்னர் தன்னை ஸ்லெட்ஜ் செய்ததாகவும், கிண்டலடித்ததாகவும் தெரிவித்தார். வார்னர் தன்னை இழிவாக பேசி கிண்டலடித்ததுதான் நன்றாக ஆட வேண்டும் என்ற உத்வேகத்தை தனக்கு அளித்ததாகவும், அதன் வெளிப்பாடுதான் அந்த இன்னிங்ஸ் என்கிற ரீதியாக எழுதியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். 

ஸ்டோக்ஸின் இந்த கருத்து பெரும் வைரலாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், வார்னருக்கு ஆதரவாக களமிறங்கி பென் ஸ்டோக்ஸிற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், நான் வார்னருக்கு அருகில் தான் நின்று கொண்டிருந்தேன். வார்னர், பென் ஸ்டோக்ஸை எந்த தகாத வார்த்தையாலும் பேசவில்லை. ஸ்லெட்ஜிங்கும் செய்யவில்லை. வார்னர் ஆஷஸ் தொடரில் சரியாக பேட்டிங் ஆடவில்லை. ஆனாலும் களத்தில் அவர் நிதானமாக இருந்து ஆஷஸ் தொடர் முழுவதையும் அவர் கையாண்ட விதம் அபாரமானது. 

ஆனால், இப்போதெல்லாம் வார்னரின் பெயரை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவது என்பது இங்கிலாந்தில் டிரெண்டாகிவிட்டது. அவர்களது புத்தகத்தை விற்பதற்கு இதுபோன்ற உத்தியை பயன்படுத்துகின்றனர். அவர்கள் புத்தகம் நன்றாக விற்பனையாக எனது வாழ்த்துக்கள் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்த வார்னர், அந்த தடை முடிந்து திரும்பியபிறகு, முற்றிலுமாக மாறுபட்டிருக்கிறார். முன்பைப்போல் அவர் களத்தில் அவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பதுமில்லை. எதிரணி வீரர்களை பெரிதாக ஸ்லெட்ஜ் செய்வதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில்தான் பென் ஸ்டோக்ஸ், வார்னரை பற்றி எழுதியுள்ளார். அதற்காகத்தான் வரிந்துகட்டிக்கொண்டு டிம் பெய்ன், வார்னருக்கு ஆதரவாக தனது குரலை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். 
 

click me!