பல வீரர்களின் ஒழுக்கமின்மை குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகார் தெரிவித்ததாகவும், இதன் ஒரு பகுதியாக பிசிசிஐ யோ யோ டெஸ்ட் முறையை மீண்டும் அமல் படுத்த முடிவு செய்துள்ளதா தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தேர்வுக்கு முன் உடற்தகுதியை நிரூபிக்கும் யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை மீண்டும் கொண்டு வர பிசிசிஐ தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் தேர்வாக உடற்தகுதி கட்டாயமாக்கப்பட உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விராட் கோலி கேப்டனாக இருந்தபோதுதான் இந்திய அணி தேர்வுக்கு யோ யோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், பின்னர் வீரர்களின் காயம் காரணமாக யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை பிசிசிஐ நீக்கியது. ஆனால், சில வீரர்கள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடந்த பிசிசிஐ மதிப்பாய்வுக் கூட்டத்தில் மீண்டும் யோ யோ டெஸ்ட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை எழுந்தது.
பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் இந்தப் பரிந்துரையை ஆதரித்ததாக தகவல்கள் வருகின்றன. மதிப்பாய்வுக் கூட்டத்தில் பல வீரர்களின் ஒழுக்கமின்மை குறித்து பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகார் தெரிவித்ததாகவும், இதன் ஒரு பகுதியாகவே பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொடர்களாக இருந்தாலும், உள்ளூர் தொடர்களாக இருந்தாலும், அணி ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் பிசிசிஐ முன்வைத்துள்ளது.
வெளிநாட்டு தொடர்களில் பல நேரங்களில் வீரர்கள் தனியாக வருவது கவனத்திற்கு வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வெளிநாட்டு தொடர்களில் அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கும், அதற்கும் குறைவான நாட்களாக இருந்தால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்கும் மட்டுமே வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியும் என்றும், பயணங்களில் வீரர்களின் பொருட்களின் எடை 150 கிலோவுக்கு மேல் இருந்தால், அதற்கான செலவை வீரர்களே ஏற்க வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.