
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. இதையடுத்து ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். வெளிநாட்டு வீரர்களும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர்.
ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இங்கிலாந்தில் நடத்தும் முனைப்பில் பிசிசிஐ உள்ளதாக தகவல் வெளியானது. இங்கிலாந்தின் எம்சிசி, வார்விக்ஷைர், லங்காஷைர், சர்ரே ஆகிய கவுண்டிகள் ஐபிஎல்லை நடத்த ஆர்வம் தெரிவித்த நிலையில், இங்கிலாந்து கவுண்டிகளை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பல நாடுகள் ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஐபிஎல் எஞ்சிய போட்டிகள் செப்டம்பரில் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கங்குலி, இந்தியா 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆட இலங்கைக்கு செல்கிறது. 14 நாட்கள் குவாரண்டின் எல்லாம் உள்ளது. எனவே இந்தியாவில் நடத்தப்பட வாய்ப்பேயில்லை. குவாரண்டினை கையாள்வது கடினம். எந்த காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்துவது என்பதை இப்போதே கூறமுடியாது என்று கங்குலி தெரிவித்தார்.