ஐபிஎல் 2020 அப்டேட்.. மௌனம் கலைத்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி

By karthikeyan VFirst Published Mar 25, 2020, 10:09 AM IST
Highlights

ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அப்டேட் தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி சர்வதேசத்தையே பயங்கரமாக அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் கொரோனாவால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழி. எனவே உலகம் முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் அனைத்துமே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி தொடங்கப்படவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பையையே திட்டமிட்டபடி நடத்துவதா இல்லையா என்பது குறித்து விவாதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. அதற்காக அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் ஐசிசி வரும் 29ம் தேதி கான்ஃபரன்ஸ் கால் மூலம் ஆலோசிக்கவுள்ளது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மற்றும் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் நடத்துவது அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. ஐபிஎல்லை காண ரசிகர்களின் ஆர்வத்தை விட, கோடிக்கணக்கில் சம்பாதிக்க உதவும் ஐபிஎல்லில் ஆட வெளிநாட்டு வீரர்களே கூட ஆர்வமாக உள்ளனர்.

ஐபிஎல் குறித்து அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ கடந்த 24ம் தேதி(நேற்று) விவாதிக்க இருந்தது. ஆனால் அந்த கான்ஃபரன்ஸ் கால் கூட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், ஐபிஎல் குறித்து இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் கங்குலி பேசியுள்ளார்.

அப்போது ஐபிஎல் குறித்து பேசிய கங்குலி, இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஐபிஎல்லை ஒத்திவைத்த தினத்தன்று, என்ன நிலைமை இருந்ததோ, அதே நிலைதான் இன்றும் இருக்கிறது. கொஞ்சம் கூட மாறவில்லை. கடந்த 10 நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். இப்போதைக்கு எதையும் திட்டமிடமுடியாது. 

உலகம் முழுதும் கிரிக்கெட் தொடர்கள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் குறித்து இன்னும் ஜெய் ஷாவுடன் பேசவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். நிலைமையை கண்காணித்துவருகிறோம். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றிவருகிறோம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

click me!