ஐபிஎல் தொடரில் நேரம், காலத்தை மிச்சப்படுத்தவும் ,நடுவர்களுக்கு உதவி செய்யவும் புதிதாக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் முறை கொண்டு வரப்படுகிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரையில் ஐபிஎல் தொடரில் இருந்த டிஆர்எஸ் எனப்படும் டெசிஷன் ரெவியூ சிஸ்டம் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு பதிலாக ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் முறையை கொண்டு வருகிறது. பொதுவாக ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக அவர்கள் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்கள். இதன் அடுத்தகட்டமாக டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்டது.
Hawk-Eye என்ற நிறுவனம் சிறப்பு கேமராக்கள் மூலமாக போட்டியின் பேட்ஸ்மேன்கள் நிற்கும் இரண்டு முனைகளும், பந்து வீசப்படும் திசையையும் கட்சிதமாக படம் பிடிக்கும். இதில் பேட்ஸ்மேனோ, பீல்டரோ, நடுவரோ ரெவியூ கேட்கும் போது அதனை திரையில் ஒளிபரப்பு செய்வார்கள். தேர்டு அம்பயர் என்று சொல்லப்படும் டிவி அம்பயர் அதனைப் பார்த்து தான் முடிவை அறிவிப்பார். இதில் கால தாமதங்கள் ஏற்படுவதாலும், தவறுகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக இது வரையில் இருந்த இந்த டிஆர்எஸ் முறையை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த டிஆர்எஸ் தொழில்நுட்பத்திற்கு பதிலாக இனிமேல் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப முறையான ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் முறையை பிசிசிஐ கொண்டு வருகிறது. இந்த முறையின்படி டிவி அம்பயர், Hawk-Eye நிறுவனங்களுக்கு இடையே தொலைக்காட்சியை சேர்ந்த எவரும் இடம் பெற வாய்ப்பில்லை.
டிவி அம்பயர் அமர்ந்திருக்கும் அதே ரூமில் தான் Hawk-Eye நிறுவன வல்லுநர்களும் இருப்பார்கள். இதில், கள் நடுவர் என்ன கேட்கிறாரோ அதனை டிவி அம்பயர் மற்றும் Hawk-Eye வல்லுநர்கள் நேரடியாகவே ஒளிபரப்பு செய்வார்கள். இதற்கு 4 கேமராக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இனிமேல் 8 கேமராக்கள் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த 8 கேமராக்களும் மைதானத்தில் பல பகுதிகளில் பொருத்தப்பட்டு போட்டியின் நிகழ்வுகளை படம் பிடிக்கும்.
அந்த 8 கேராக்கள் என்ன படம் பிடித்ததோ அதனை ஒரே நேரத்தில் திரையில் காட்டும். இதன் மூலமாக டிவி அம்பயர் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக தனது முடிவை அறிவிக்க முடியும். மேலும், எல்பிடபிள்யூக்கு அவுட் சைடு லெக் திசையில் பந்து பிட்ச்சாகி இருந்தால் அதனை Hawk-Eye வல்லுநர்கள் கூறி விடுவார்கள். இதை வைத்து டிவி அம்பயர் திரையில் காட்டி எல்பிடபிள்யூ இல்லை என்று அறிவிக்க முடியும். இதன் மூலமாக நேரம் மிச்சப்படும். இது குறித்து முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.