
இந்திய கிரிக்கெட் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஏ+, ஏ, பி, சி ஆகிய 4 பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு முறையே ஆண்டுக்கு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி என்ற அளவில் ஊதிய ஒப்பந்தம் செய்யப்படும்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகிய மூவரும் ஏ+ பிரிவில் ரூ.7 கோடிக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ரூ.5 கோடிக்கான ஏ பிரிவில் கடந்த முறை இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்த முறை ரூ.1 கோடிக்கான கடைசி பிரிவான சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 ஆண்டுகளாகவே காயம் காரணமாக இந்திய அணிக்காக முழுமையாக ஆடுவதில்லை. அவ்வப்போது ஆடுவதும், பின்னர் காயத்தால் சென்றுவிடுவதாக இருந்தார். இப்போதுமே கூட, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய தொடர்களில் பாண்டியா ஆடவில்லை. பெங்களூருவில் உள்ள என்.சி.ஏவில் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி செய்துவருகிறார். எனவே அவர் ஏ பிரிவிலிருந்து சி பிரிவிற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஓரங்கட்டப்படுகின்றனர். எனவே அவர்கள் இனிமேல் டெஸ்ட் அணியின் ஆடும் லெவனில் நிரந்தர இடம்பிடிக்கப்போவதில்லை என்பதால், அவர்கள் இருவரும் ஏ பிரிவிலிருந்து பி பிரிவிற்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.
எந்தெந்த வீரர்கள் எந்தெந்த பிரிவில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏ+ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.7 கோடி) - ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா
ஏ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.5 கோடி) - ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முகமது ஷமி, ரிஷப் பண்ட்
பி பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.3 கோடி) - புஜாரா, ரஹானே, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், இஷாந்த் சர்மா.
சி பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.1 கோடி) - ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா, மயன்க் அகர்வால்.