
மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்த நிலையில், நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி 7வது இடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில், வங்கதேச அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஹனாரா ஆலம், கேப்டன் நிகர் சுல்தானா சக வீராங்கனைகளை தாக்கியதாக பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார். ''நிகர் சுல்தானா ஜூனியர்களை வழக்கமாக கொண்டுள்ளார். சில வீராங்கனைகள் அவருக்கு பயந்துபோய் உள்ளனர்'' என்றார்.
நிகர் சுல்தானா மீது ஜஹானாரா ஆலம் சுமத்திய குற்றச்சாட்டுகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) திட்டவட்டமாக மறுத்துள்ளது. "இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, புனையப்பட்டவை, முற்றிலும் உண்மையில்லாதவை. இவற்றை BCB திட்டவட்டமாகவும் வலுவாகவும் மறுக்கிறது. வங்கதேச மகளிர் அணி சர்வதேச அரங்கில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தி வரும் நேரத்தில், இதுபோன்ற அவதூறான மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது" என்று BCB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"நாட்டைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அணியின் மன உறுதியையும் நம்பிக்கையையும் குலைக்கும் நோக்கில், இந்தக் கருத்துகளின் நேரமும் தன்மையும் வேண்டுமென்றே, தீய எண்ணத்துடன் இருப்பதாக வாரியம் நம்புகிறது. வங்கதேச கிரிக்கெட்டின் திட்டங்களில் தற்போது எந்த ஈடுபாடும் இல்லாத ஒரு நபர், பொதுவெளியில் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் மேலும் கூறியுள்ளது.
யார் இந்த ஆலம்?
"மகளிர் தேசிய அணியின் கேப்டன், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகத்தின் மீது BCB முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறது. கூறப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் ஆதரிக்க வாரியம் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அணி மற்றும் அதன் பணியாளர்களுக்கு உறுதியாக துணை நிற்கிறது" என்று BCB கூறியுள்ளது. வங்கதேச கேப்டன் மீது குற்றம் சுமத்திய 32 வயதான ஆலம், டிசம்பர் 2024 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.