இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேசம்

By karthikeyan VFirst Published Nov 4, 2019, 9:58 AM IST
Highlights

முதல் டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது வங்கதேச அணி. 

வங்கதேச அணி இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.  அதன்பின்னர் களத்திற்கு வந்த ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சோபிக்கவில்லை. ராகுல் 15 ரன்களிலும் ஷ்ரேயாஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிவந்த ஷிகர் தவானும் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 41 ரன்களில் நடையை கட்டினார். ரிஷப் பண்ட் 27 ரன்களும் ஷிவம் துபே ஒரு ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும் க்ருணல் பாண்டியாவும் அதிரடியாக ஆடி சில பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

19வது ஓவரில் க்ருணல் பாண்டியா ஒரு பவுண்டரியும் சுந்தர் ஒரு சிக்ஸரும் அடித்தனர். கடைசி ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது. 149 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை இந்திய அணி விரைவில் வீழ்த்தினாலும் அதன்பின்னர் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியாமல் அதேநேரத்தில் ரன்களையும் வாரி வழங்கினர். 

மற்றொரு தொடக்க வீரர் முகமது நைம் 26 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் சௌமியா சர்க்காருடன் ஜோடி சேர்ந்த முஷ்ஃபிகுர் ரஹீம் அபாரமாக ஆடினார். சார்க்காரும் ரஹீமும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்தனர். சௌமியா சர்க்கார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் அரைசதம் அடித்தார். 

கடைசி இரண்டு ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இருந்திருந்தால் கட்டுப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற்றிருந்திருக்கலாம்.  அவர்கள் இல்லாமலும் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த முஷ்ஃபிகுர் ரஹீம், கலீல் அகமது வீசிய 19வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி அந்த ஓவரிலேயே வெற்றியை உறுதிப்படுத்திவிட்டார். இதையடுத்து கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார் மஹ்மதுல்லா. இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி. 

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இதுதான் வங்கதேச அணியின் முதல் வெற்றி. இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது வங்கதேச அணி.

click me!