என் ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் எனது ஃபேவரைட் இன்னிங்ஸ் இதுதான்..! சாதனை நாயகன் பாபர் அசாம் ஓபன் டாக்

By karthikeyan V  |  First Published May 8, 2023, 9:25 PM IST

தனது ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தான் ஆடியதில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட்டரும் கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
 


விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த 4 வீரர்களாக அறியப்பட்ட நிலையில், அவர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் இணைந்துவிட்டார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி ரன்களை குவிப்பதுடன், சாதனைகளையும் படைத்துவருகிறார்.

பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3696 ரன்களையும், 100 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5089 ரன்களையும், 104 டி20 போட்டிகளில் ஆடி 3485 ரன்களையும் குவித்துள்ளார்.

Latest Videos

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவந்த நிலையில், பாபர் அசாம், கோலியின் சாதனைகளையும் சேர்த்து முறியடித்துவருகிறார். அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணி 4-1 என ஒருநாள் தொடரை வெல்ல உதவினார். இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டிதான் அவரது 100வது ஒருநாள் போட்டி.

100வது ஒருநாள் போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தாலும், 100 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களுடன் 59.17 என்ற சராசரியுடன் 5089 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2ம் இடத்தில் ஹாஷிம் ஆம்லா (4808) மற்றும் 3ம் இடத்தில் ஷிகர் தவான்(4309) ஆகிய இருவரும் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து புதிய மைல்கற்களை எட்டிவரும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று தெரிவித்துள்ளார் பாபர் அசாம்.

இதுகுறித்து பேசிய பாபர் அசாம், 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நான் அடித்த சதம் தான் எனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் ஆகும். பாகிஸ்தானை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிவிட்டோம். ஆனால் அந்த இலக்கை அடிப்பது சவாலாகிவிட்டது. நானும் ஹாரிஸும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினோம். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஸ்பின்னர்களை ஆடினோம். அதுதான் எனக்கு பிடித்த இன்னிங்ஸ் அதுதான் என்று பாபர் அசாம்.

பாபர் அசாம் சொன்ன அந்த குறிப்பிட்ட போட்டியில் நியூசிலாந்தை 237 ரன்களுக்கு சுருட்டியது பாகிஸ்தான். 238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமான்(9) மற்றும் இமாம் உல் ஹக் (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களூக்கு ஆட்டமிழந்துவிட்டனர். அதன்பின்னர் பாபர் அசாமும் ஹாரிஸ் சொஹைலும் சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தனர். இந்த போட்டியில் பொறுப்புடன் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம் 127 பந்தில் 101 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!