மத்த ஸ்டேடியம்லாம் எதுக்கு கட்டி கெடக்கு..? பல்லாங்குழி ஆடுறதுக்கா..?

By karthikeyan VFirst Published Oct 24, 2019, 3:30 PM IST
Highlights

விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியை காண மட்டும்தான் ஓரளவிற்கு கூட்டம் வந்தது. புனே மற்றும் ராஞ்சியில் சுத்தமாக கூட்டமே இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ரசிகர்கள் இருந்தனர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. விசாகப்பட்டினம், புனே மற்றும் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களிலும் டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் விசாகப்பட்டினத்தில் மட்டும்தான், போட்டியை காண ஓரளவிற்கு கூட்டம் வந்தது. புனே மற்றும் ராஞ்சியில் சுத்தமாக கூட்டமே இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் ரசிகர்கள் இருந்தனர். 

இதுகுறித்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் கேப்டன் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டை ஏதேனும் 5 இடங்களை தேர்வு செய்து அங்கு மட்டுமே நடத்தலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

கோலியின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, நம் நாட்டில் மாநிலங்கள் இருக்கின்றன. நிறைய ஸ்டேடியங்கள் இருக்கின்றன என்றார். அதாவது அப்படியெல்லாம் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடத்துவது சாத்தியமல்ல எனும் ரீதியாக தெரிவித்தார். ஆனாலும் இதுகுறித்து கோலியுடன் அமர்ந்து பேசி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார். 

கோலி சொல்வது போல் செய்வதெல்லாம் நடைமுறை சாத்தியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கமுமே தங்களது மைதானத்தில் டெஸ்ட் போட்டியை நடத்தவே விரும்பும். அதுமட்டுமல்லாமல் கூட்டம் வராத ஸ்டேடியங்களின் அமைவிடம் மற்றும் எந்த நாட்களில் கூட்டம் வரவில்லை என்பதையெல்லாம் ஆராய வேண்டும். 

வார நாட்களில் பெரும்பாலும் கூட்டம் வராது. அதுபோல புனே ஸ்டேடியமெல்லாம் ஊருக்கு வெளியே அமைந்திருக்கிறது. எனவே அங்கு இயல்பாகவே கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் வரும். அதுவும் டெஸ்ட் போட்டி என்பதாலும் வார நாட்களிலும் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். அதற்காக இந்தந்த மைதானங்களில் எல்லாம் மட்டுமே நடத்தலாம் என்பது நல்ல ஐடியா அல்ல. கோலியின் ஐடியாவால் அதிருப்தியடைந்த அசாருதீன் கூட, அந்த ஐடியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

கோலியின் கருத்துடன் கடுமையாக முரண்பட்டிருக்கிறார் முன்னாள் கேப்டன் அசாருதீன். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அசாருதீன், 5 மைதானங்களில் மட்டும் டெஸ்ட் போட்டி நடத்தினால், மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் கட்டிவைத்துள்ள ஸ்டேடியங்களை என்ன செய்வது..? டெஸ்ட் கிரிக்கெட் ரொம்ப முக்கியமானது. அனைத்து கிரிக்கெட் சங்கங்களுமே தங்கள் மைதானங்களில் போட்டியை நடத்த விரும்பும். அவர்கள் ஏன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மட்டுமே நடத்த வேண்டும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!