
இங்கிலாந்து, ஆஸ்திரேலியான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் (138 ரன்கள்) சூப்பர் சதம் விளாசினார். தொடக்க வீரர் ஜாக் கெரொலி 76 ரன்கள் அடித்தார். பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 73 ஓவர்களில் 378 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் உள்ளது.
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜேக் வெதரால்ட், மார்னஸ் லபுஸ்சேன் அதிரடியாக விளையாடினார்கள். சூப்பராக பேட்டிங் செய்த ஜேக் வெதரால்ட் (78 பந்தில் 72 ரன்) ஆர்ச்ச்சர் பந்தில் அவுட் ஆனார். பின்பு மார்னஸ் லபுஸ்சேனும் (65 ரன்) அரை சதம் விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக விளையாடியதால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (61 ரன்), கேமரூர் கிரீன் (45) கார்ஸ் பந்தில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி (45 ரன்), மைக்கேல் நேசர் (15) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இதுதான் bazball ஆட்டம்
பொதுவாக இங்கிலாந்து அணி bazball எனப்படும் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றது. இன்றைய நாளில் ஆஸ்திரேலிய அணி அவர்களிடமே அதிரடி ஆட்டத்தை ஆடி பட்டய கிளப்பியுள்ளது. இன்னும் 4 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய வலிமையான நிலையை நோக்கி முன்னேறுகிறது.