ஃபின்ச்சின் சதத்தை மழுங்கடித்த ஸ்மித்தின் அதிரடி சதம்! மேக்ஸ்வெல் காட்டடி.. இந்திய அணிக்கு மிகக்கடினமான இலக்கு

By karthikeyan VFirst Published Nov 27, 2020, 1:36 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவர்களில் 374 ரன்களை குவித்து 375 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆரம்பத்திலேயே பும்ரா மற்றும் ஷமியிடம் விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த இருவரும் அவசரப்படாமல் நிதானமாக தொடங்கி ஆடினர்.

ஃபின்ச் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து வார்னரும் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின்னர் அடித்து ஆடிய வார்னர், 76 பந்தில் 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்த ஃபின்ச் சதமடித்தார். ஆனால் சதத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 124 பந்தில் 114 ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். இதையடுத்து, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மேக்ஸ்வெல், வெறும் 19 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசி நடையை கட்டினார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஸ்மித் 62 பந்திலேயே சதமடித்தார். 66 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார். ஃபின்ச், ஸ்மித் ஆகியோரின் சதம் மற்றும் மேக்ஸ்வெல்லின் காட்டடி இன்னிங்ஸ், வார்னரின் அரைசதம் ஆகியவற்றால் ஐம்பது ஓவரில் 374 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 375 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!