இந்திய அணியை வச்சு முரட்டு சம்பவம் செய்த ஆஸ்திரேலியா!! இப்படி அசிங்கப்படுறது இதுதான் முதன்முறை

By karthikeyan VFirst Published Mar 11, 2019, 10:19 AM IST
Highlights

ஸ்பின் பவுலிங்கை டர்னர் அடித்து நொறுக்கியபோதும், தொடர்ச்சியாக ஸ்பின் பவுலர்களிடமே பந்தை கொடுத்த கேப்டன் கோலி, விஜய் சங்கரை பரிசீலனை கூட செய்யவில்லை. ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடும் டர்னருக்கு விஜய் சங்கரை பந்துவீச வைத்திருக்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

நேற்றைய போட்டியில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட், ராயுடுவுக்கு பதில் ராகுல், ஷமிக்கு பதில் புவனேஷ்வர் குமார், ஜடேஜாவிற்கு பதில் சாஹல் ஆகிய 4 மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். 32 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டிவிட்டது இந்திய அணி. ஆனால் அதன்பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணியால் இமாலய இலக்கை எட்டமுடியவில்லை. ரோஹித்தும் தவானும் அமைத்து கொடுத்த அடித்தளத்திற்கு, 400 ரன்களை எட்டியிருக்கலாம் அல்லது 400 ரன்களை நெருங்கியிருக்கலாம். ஆனால் கோலி, ராகுல், கேதர் ஆகியோர் சொதப்பினர். ரிஷப் பண்ட், விஜய் சங்கர் ஓரளவிற்கு ஆடி ரன்களை சேர்த்தனர். எனினும் 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது இந்திய அணி. 

358 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான் என்றாலும் இந்திய அணி ஆரம்பத்தில் சென்ற வேகத்திற்கு இது குறைவான ஸ்கோர்தான். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமான மொஹாலியில் இது குறைவான ஸ்கோர்தான். 

இந்த ஸ்கோரை அருமையாக ஆடி எட்டி பிடித்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். முதல் 2 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கே இழந்துவிட்ட போதிலும் அதன்பிறகு கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்ப்பும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர். பெரிய இலக்கை விரட்டும்போது, மிடில் ஓவர்களில் எப்படி ஆடவேண்டுமோ, அதை தெளிவாக ஆடினர். விக்கெட்டையும் விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் ரன்ரேட்டும் குறையாமல் ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து 192 ரன்களை குவித்தனர். 

அதன்பிறகு டெத் ஓவர்களில் ஆஷ்டன் டர்னர் இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கினார். ஆஷ்டன் டர்னர் களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவரது ஸ்டம்பிங்கை தவறவிட்டார் ரிஷப் பண்ட். பின்னர் கேதர் ஜாதவ் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இவ்வாறு டர்னருக்கு போதுமான வாய்ப்புகளை இந்திய வீரர்களே ஏற்படுத்தி கொடுத்தனர். 

ஸ்பின் பவுலிங்கை டர்னர் அடித்து நொறுக்கியபோதும், தொடர்ச்சியாக ஸ்பின் பவுலர்களிடமே பந்தை கொடுத்த கேப்டன் கோலி, விஜய் சங்கரை பரிசீலனை கூட செய்யவில்லை. ஸ்பின் பவுலிங்கை அடித்து ஆடும் டர்னருக்கு விஜய் சங்கரை பந்துவீச வைத்திருக்கலாம். ஆனால் கோலி அதை செய்யவில்லை. சாஹல் மட்டுமே 80 ரன்களை விட்டுக்கொடுத்தார். மோசமான கேப்டன்சி, மோசமான வியூகம், மோசமான விக்கெட் கீப்பிங், மோசமான ஃபீல்டிங் ஆகியவற்றின் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. 

359 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரிலேயே எட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது பேட்டிங் செய்து விரட்டிய அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னர் இவ்வளவு அதிகமான ஸ்கோரை அந்த அணி விரட்டி வெற்றி பெற்றதில்லை. 2011ல் இங்கிலாந்துக்கு எதிராக 334 ரன்களை விரட்டியதுதான் அந்த அணி வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச ஸ்கோர். அதேபோல இதற்கு முன்னர் இந்திய அணிக்கு எதிராக 2007ல் பாகிஸ்தான் அணி 322 ரன்களை வெற்றிகரமாக விரட்டியது. அதுதான் இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியும் இதற்கு முன்னர், இவ்வளவு அதிகமான ஸ்கோர் அடித்து தோற்றதில்லை. தற்போதுதான் இந்திய அணி சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதாக கருதப்படும் நிலையில், விரும்பத்தகாத வகையில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. சிறந்த பவுலிங் யூனிட்டிற்கு எதிராக சிறப்பான சம்பவத்தை செய்துவிட்டது ஆஸ்திரேலிய அணி. 
 

click me!