இந்திய அணியை அடித்து துவம்சம் செய்த ஹேண்ட்ஸ்கம்ப் - டர்னர்!! டஃப் டார்கெட்டை ஈசியா எட்டி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 10, 2019, 9:58 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - தவான் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து சொதப்பிவந்த தவான், இந்த போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். தொடக்கம் முதலே தவான் அடித்து ஆடினார். 

ரோஹித் சர்மா வழக்கம்போல தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும் களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடினார். இருவரும் இணைந்து சிறப்பாக ஆட, முதல் விக்கெட்டை வீழ்த்தவே திணறினர். 92 பந்துகளில் 95 ரன்களை குவித்த ரோஹித் சர்மா 5 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஆனால் தவான் அவசரப்படவில்லை. சதத்தை பூர்த்தி செய்தார். சதத்திற்கு பிறகு அதிரடியாக ஆடி பவுண்டரிகளை விளாசிய தவான், 115 பந்துகளில் 143 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க, களத்தில் நிலைத்து நின்ற ராகுல் தவறான ஷாட் செலக்‌ஷனால் ஸாம்பாவின் பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மட்டுமே சில பவுண்டரிகளை அடித்தார். அவரும் 36 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

டெத் ஓவர்களை கம்மின்ஸும் ரிச்சர்ட்ஸனும் இணைந்து நன்றாக வீசினர். சாதாரணமாக 370 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டிய இந்திய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். கேதர் ஜாதவும் கம்மின்ஸின் பந்தில் வெளியேற, 49வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் விஜய் சங்கர். கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸரை விளாசிய விஜய் சங்கர் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்த பும்ரா, சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்தது. 

ரோஹித்தும் தவானும் அமைத்து கொடுத்த அடித்தளத்திற்கு இந்த ஸ்கோர் மிகக்குறைவு. 32 ஓவர்களிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டிவிட்ட நிலையில், எஞ்சிய 18 ஓவர்களுக்கு 158 ரன்கள் என்பது குறைவு. ரோஹித் 95 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 400க்கு மேல் போயிருக்கும். எனினும் 358 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான்.

359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சை முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே புவனேஷ்வர் குமார் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த ஷான் மார்ஷை 6 ரன்களில் பும்ரா போல்டாக்கினார். ஆஸ்திரேலிய அணி 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பிறகு கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். கவாஜா - ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.

பெரிய இலக்கை விரட்டும்போது, மிடில் ஓவர்களில் எப்படி ஆடவேண்டுமோ, அதை தெளிவாக ஆடினர். விக்கெட்டையும் விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் ரன்ரேட்டும் குறையாமல் ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து 192 ரன்களை குவித்தனர்.

கவாஜாவை 91 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். கவாஜாவின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த மேக்ஸ்வெல், அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார். ஆனால் அவரது அதிரடி ஆட்டத்தை தொடர அனுமதிக்காத குல்தீப், எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பினார். மேக்ஸ்வெல்லை தொடர்ந்து, சதத்தை கடந்து ஆடிக்கொண்டிருந்த ஹேண்ட்ஸ்கம்பை 117 ரன்களில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் ஆஷ்டன் டர்னர். சாஹல் பவுலிங்கை அடித்து ஆடினார். ஸ்பின் பவுலிங்கை டர்னர் அடித்து ஆடியபோதும் மீண்டும் மீண்டும் குல்தீப்பிடமும் சாஹலிடமுமே பவுலிங்கை கொடுத்தார் கேப்டன் கோலி. 38-44 ஓவர்களில் விஜய் சங்கரிடம் சில ஓவர்கள் கொடுத்திருக்கலாம். விஜய் சங்கர் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார். ஆனால் கோலி அதை செய்யவில்லை. ஸ்பின்னர்களிடமே கொடுக்க, டர்னர் ஸ்பின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். ஒரு கட்டத்தில் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்ப, அதன்பின்னர் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா வீசிய டெத் ஓவர்களையும் அடித்து நொறுக்கினார் டர்னர். 

அரைசதம் கடந்த பிறகு ஒவ்வொரு பந்தையும் அடிக்க ஆரம்பித்தார். டர்னரின் அதிரடியால் 48வது ஓவரிலேயே 359 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. டர்னருக்கு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டார் ரிஷப் பண்ட். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்திருந்தால் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக மாறியிருக்கும்.

ஆஸ்திரேலிய அணி 359 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

click me!