இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. உலக கோப்பையில் ஆடிய 7 வீரர்களை தூக்கியெறிந்து அதிரடி

By karthikeyan VFirst Published Dec 18, 2019, 10:19 AM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலிய அணி ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. உலக கோப்பைக்கு அடுத்து 7 மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஆடப்போகும் முதல் ஒருநாள் தொடர், இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர்தான். 

2020 ஜனவரி 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பையில் ஆடிய ஒருநாள் அணியில் 7 வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. அதிரடியான மாற்றங்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை அணியில் இருந்த உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் குல்ட்டர்நைல், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகிய 7 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். 

பெஹ்ரெண்டோர்ஃப் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மற்ற 6 வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி சதங்களை குவிப்பதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவரும் மார்னஸ் லபுஷேன், முதன்முறையாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் சீன் அப்பாட், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இந்த தொடரில் பயிற்சியளிக்க இந்தியாவிற்கு வரவில்லை. எனவே சீனியர் உதவி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் டர்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேசில்வுட், சீன் அப்பாட், நாதன் லயன். 
 

click me!