இரட்டை சதத்தை நோக்கி வார்னர்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 22, 2019, 2:52 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் உள்ளது.
 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, வெறும் 240 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி ஆல் அவுட்டாக, இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். தொடக்கம் முதலே நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினர். வார்னர் - பர்ன்ஸ் தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 16 வயது இளம் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் நசீம் ஷாவின் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. நசீம் ஷாவின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை. அவரது பவுலிங்கை வார்னரும் பர்ன்ஸும் திறம்பட எதிர்கொண்டு அபாரமாக ஆடினர். 

ஆஷஸ் தொடரில் ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக சொதப்பிய வார்னர், இந்த போட்டியில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அபாரமாக ஆடிய வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து ஜோ பர்ன்ஸும் சதத்தை நெருங்கினார். ஆனால் 97 ரன்களில் யாசிர் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பர்ன்ஸும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். பர்ன்ஸ் ஆட்டமிழந்ததை அடுத்து, மார்னஸ் லபுஷேன், வார்னருடன் ஜோடி சேர்ந்தார்.

வார்னர் தனது சிறப்பான பேட்டிங்கை தொடர, லபுஷேனும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிவருகிறார். சதத்திற்கு பின்னரும் தனது நிதானமான மற்றும் தெளிவான ஆட்டத்தை தொடர்ந்த வார்னர், 150 ரன்களை எட்டிவிட்டார். லபுஷேனும் அரைசதம் அடித்துவிட்டார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்துள்ளது. 

வார்னர் 151 ரன்களுடனும் ஜோ பர்ன்ஸ் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளதால், முதல் இன்னிங்ஸில் 550-600 ரன்களை அடித்துவிட்டு பாகிஸ்தானை இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிடும். எனவே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதி.
 

click me!